Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

ஏசி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை

தமிழகத்தில் ஏசி பேருந்துகளை மீண்டும் இயக்க அரசு அனுமதிஅளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளி யிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுக்குப் பின் தமிழகத்தில் கடந்த ஆண்டு செப். 7-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், ஏசி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் அரசிடம் அனுமதி கோரின. தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களும் அனுமதி கோரியிருந்தனர்.

இதையடுத்து, ஏசி பேருந்துகளை இயக்க அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அரசாணை:

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்துகள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிமாணவர்களுக்கான பேருந்துகள்ஆகியவற்றை குளிர்சாதன வசதியுடன் இயக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி உடனடியாக அம லுக்கு வருகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்

ஏசி பேருந்துகளில் 24 முதல் 30டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலையும், 40 முதல் 70 சதவீதம் வரைஈரப்பதமும் இருக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயணிக்க அனுமதிக்கக் கூடாது.பணப் பரிவர்த்தனையை தவிர்த்து, மாதாந்திர பயணச்சீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பேருந்துகளின் உள்ளேயும், மாதாந்திர பாஸ் வழங்கும் இடங்களிலும் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் பயணச்சீட்டு வழங்குதல் வேண்டும். பயணிகள் மாதாந்திர பாஸ் வைத்திருக்காத பட்சத்தில் டிக்கெட் வழங்கலாம்.

ஒவ்வொரு ‘டிரிப்’ முடிந்ததும் பேருந்துகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். பேருந்துகளில் கைகழுவும் திரவம் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர், நடத்துநர் முகக்கவசம் அணிய வேண்டும். பயணிகளும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினை உள்ள பயணிகள் பேருந்தில் ஏறக்கூடாது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, “அரசின் அனுமதியைத் தொடர்ந்து இன்று முதல் ஏசி பேருந்துகளின் சேவை தொடங்கப்படுகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x