

நாடுமுழுவதும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை அடுத்த மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது.
முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடும் பணி கடந்த 13-ம்தேதி தொடங்கியது. தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நிலையில், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா தொற்று தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரம், காவல், உள்ளாட்சி போன்ற பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 50 வயதுக்குமேற்பட்டவர்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி பணியை மார்ச் மாதம்தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் செய்து வருகின்றன’’ என்றனர்.