

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்டநேரம் காத்திருக்காமல் பயணம் செய்யவசதியாக தானியங்கி முறையில் செயல்படும் ‘பாஸ்டேக்’ திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த முறையின் மூலம், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது, மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான சுங்கக் கட்டணம் தானியங்கி முறையில், பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த முறைக்கு வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு கால அவகாசம் பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கடந்த 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன்படி கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
சுங்கச்சாவடிக்குள் வாகனம் செல்லும்போது, மின்னணு பரிவர்த்தனை கருவி சரியாக ரீடாவதில்லை, இதனால்காலதாமதம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். இன்னும் சிலர், சுங்கச்சாவடியைக் கடக்கும்போது, பிடித்தம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கட்டணம் பிடித்தம்செய்ததாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறது.
இதுதொடர்பாக சுங்கச்சாவடி நிர்வாகத்தினரிடம் கேட்டால், உங்களுக்கு வழங்கப்பட்ட மின்னணு பரிவர்த்தனை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைமையத்தை அணுகுங்கள் என கூறுகின்றனர். அவ்வாறு அதிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டால், அவர்கள் இந்தி அல்லதுஆங்கிலத்தில் மட்டுமே பேசுகின்றனர். அதுவும் புரியும்படியாக எளிமையாக இல்லை என்று லாரி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ் மொழி தொடர்புடைய நபரை தேடிச் சென்று, பின்னர் தங்கள்பிரச்சினை குறித்து எடுத்துக் கூறினால்,பிடித்த கட்டணம் 15 தினங்களுக்குப் பின்னர்தான் கிடைக்கும் என பதில் வருவதாக கூறினர்.
இதுதொடர்பாக சாலை பயனீட்டாளர் நலச் சங்கத் தலைவர் பிரகாஷ் கூறுகையில், “பயண நேர விரயத்தை குறைக்கவே ‘பாஸ்டேக்’ முறை அமல்படுத்திஉள்ளனர். ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகளை ஆராயாமல் அவசர கதியில் செயல்படுத்துகின்றனர். ‘பாஸ்டேக்’ இல்லாமல் வந்தால், அவரிடம்அபராதமாக இரு மடங்கு கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடி நிர்வாகம், ‘பாஸ்டேக்’ கருவி பொருத்தியிருக்கும் நபரிடம், இருமுறை கட்டணம் பிடித்தால்,சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு என்னதண்டனை என்பது குறிப்பிடப்படவில்லை” என்றார்.
இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மேலாளர் யோகேஷிடம் கேட்டபோது, “பாஸ்டேக் மின்னணு கருவி பிரச்சினை தொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தின் தகவல்கள்பெரும்பாலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தாலும், வாடிக்கையாளர் விரும்பும் மொழிக் குறித்து விண்ணப்பித்தால், அவர் கேட்கும் மொழியிலும் தகவல் பரிமாற்றத்தை வங்கி நிர்வாகங்கள் செய்துள்ளன. மற்றபடி பாஸ்டேக் கருவி ரீடாவதில்லை என்ற புகார்கள் உள்ளன. அதற்குக் காரணம் ஒருவர் வாகனத்தை மற்றொருவருக்கு விற்கும்போது விதிமுறைகளை சரியாக பின்பற்றாதது, நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருத்தல் போன்ற காரணங்களாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.