Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM

பட்டியல் மாற்றம் செய்யாமல் எங்கள் வாக்குகளை பாஜகவால் அறுவடை செய்ய முடியாது: டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை

மதுரை

பட்டியல் மாற்றமின்றி எங்களது வாக்குகளை பாஜக-வால் அறுவடை செய்ய முடியாது என புதிய தமிழகக் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எங்களது நீண்ட நாள் கோரிக்கையான பெயர் மாற்றம் குறித்த மசோதாவை பிப்.13-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. 6 உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திர குல வேளாளர் என்றஒரே பெயரில் அழைக்க வேண்டும். அவர்களை பட்டியல் பிரிவில்இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் நீண்ட நாள் கோரிக்கை.

2019-ல் மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த பிரதமர் மோடியிடம் கூறியபோது, எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார். பெயர் மாற்றம் மட்டுமல்ல பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதே கோரிக்கையின் உள்ளார்ந்த அம்சம்.

அதைப் பரிசீலிக்காமல் வெறும் பெயர் மாற்றத் திருத்த மசோதா மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெயர் மாற்றமசோதாவில் சிறு மாற்றம் கொண்டுவந்து பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

மாநில அரசும் பட்டியல் மாற்றமின்றி பெயர் மாற்றத்துக்கு மட்டுமே பரிந்துரைத்துள்ளது. மாநில அரசும் மார்ச் 8-ம் தேதிக்கு முன்னதாக பட்டியல் மாற்றத்துக்கு பரிந்துரைக்க வேண்டும். நாங்கள் பெயர் மாற்றத்தை மட்டும் முழுமையாக ஏற்கும் நிலையில் இல்லை, மத்திய, மாநில அரசும் கோரிக்கையைப் புரிந்து பட்டியல் மாற்றம் கொண்டுவரவேண்டும்.

ஒருசிலர் கட்சிகளில் நெருக்கம் வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் கருத்துகளை ஏற்கக் கூடாது.

இந்து பாரம்பரியமிக்கவர்கள் எனக் கூறிக்கொள்ளும் மத்திய அரசுகூட எங்களது பட்டியல் மாற்றத்துக்கு முன்வரவில்லை. மத்திய அரசு இந்தக் கேலிக்கூத்தை ஏன் செய்கிறது. தனிநபர், அறக்கட்டளை நடத்துவோர் கூறுவதை வைத்துக் கேட்டால் அதை லட்சக்கணக்கான மக்கள் எப்படி ஏற்பர்? இதைப் பரிசீலிக்கவில்லை என்றால் மத்திய, மாநில அரசுகளை நிராகரிப்போம். பட்டியலில் இருந்து வெளியேறும் வரை நாங்கள் போராடுவோம்.

எங்களை தாழ்ந்த சாதியாக இருக்க மத்திய அரசு கருதுகிறதா என குற்றம் சுமத்துகிறேன். நாங்கள் ஒரு பாதை காட்டும்போது, நீங்கள் எதிர்பாதையைக் காட்டக் கூடாது. 3 சதவீத உள்ஒதுக்கீடு வந்தபோது, எங்களுக்கான ஒதுக்கீடு உரிமை பறிக்கப்பட்டது. முற்பட்டோர் பட்டியலில் வைத்தாலும் 10 சதவீத ஒதுக்கீடு கிடைக்கும்.

இட ஒதுக்கீட்டுக்காக அல்ல.சுய மரியாதைக்காக வெளியேற்றுங்கள். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலில் எங்களது நிலைப்பாடு எதிரொலிக்கும். ஜனநாயகரீதியாக தேர்தலைச் சந்திப்போம்.

பிப்.25-ம் தேதி கோவைக்கு வரும் பிரதமரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். பட்டியலில் மாற்றம் செய்யாமல் எங்கள் மக்களின் ஆதரவைப் பெற முடியாது. பாஜக அரசு நினைத்தால் இதைச் செய்யலாம். அரசியல்ரீதியாக பாஜக எங்களது வாக்குகளை அறுவடை செய்ய நினைத்தால் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும். அதை செய்யாமல் வெறும் பெயர் மாற்றத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x