

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வாடகை கார் (டாக்ஸி) உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதோடு, சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது. விலை உயர்வுக்கு எதிராகவும், விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், கால் டாக்ஸி கட்டணங்களை உயர்த்த கோரியும் திருப்பூர் வாடகை கார் (டாக்ஸி) உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச்சங்கத்தினர் சார்பில் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் நேற்று இயக்கப்படவில்லை. பாரப்பாளையம், முத்தணம்பாளையம், நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்களது வாடகை கார்களை வரிசையாக நிறுத்தி, எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் பாலாஜி கூறும்போது, "திருப்பூர் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடகை கார் ஓட்டுநர்கள் உள்ளோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால், கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு சரியான முறையில் மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும்" என்றார்.