

உடைந்த முட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி உணவகங்களுக்கு விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 4000-க்கும் மேற்பட்ட முட்டைகள் அழிக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் மாநகர், அவிநாசி, அம்மாபாளையம், திருமுருகன்பூண்டி ஆகிய பகுதிகளில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் பா.விஜயலலிதாம்பிகை தலைமையிலான அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "இரண்டு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சுமார் 1 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேற்கண்ட கடைகளுக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.10000 அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு கடையில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. உணவு தயாரிக்க அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த 2 கிலோ காய்கறிகளும் அழிக்கப்பட்டன.
இந்நிலையில், உடைந்த முட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி சிறிய உணவகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்தது. இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் முட்டை வியாபாரம் செய்யும் சந்திரசேகரன் (42), திருப்பூருக்கு முட்டை கொண்டு வந்தபோது பிடிபட்டார். அவரது வாகனத்தில் இருந்த உடைந்த 4200 முட்டைகள் குறைந்த விலைக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியிலுள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து குறைந்த விலையில் உடைந்த முட்டைகளை சேகரித்து மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி திருப்பூர் மாவட்டத்தில் உணவகங்களுக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். இது, உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி குற்றம். எனவே, சந்திரசேகர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கப்படுகிறது" என்றனர்.