Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM

700-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி பிப்.24-ல் தொடக்கம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்

பபாசியின் புத்தகக் காட்சியை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்.24-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கரோனா பரவலால் 44-வது புத்தகக் காட்சி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி புத்தகக் காட்சியை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 44-வது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்.24 முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கான சின்னம், ஹேஷ்டேக் ஆகியவற்றை பபாசி நிர்வாகிகள் சென்னையில் நேற்று வெளியிட்டனர். தொடர்ந்து பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புத்தகக் காட்சியை பிப்.24-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசு அறிவுறுத்திய அனைத்து கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படும்.

இந்த புத்தகக் காட்சியில் 700-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தினமும் காலை 11 முதல் மாலை 8 மணி வரை வாசகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுக் கட்டணம் ரூ.10. இணையவழியிலும் நுழைவுச்சீட்டு பெறலாம். பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் தனி அரங்கில் காட்சிக்கு வைக்கப்படும். மேலும், புத்தகக் காட்சியின்போது ட்விட்டர் வழியாக சிறந்த புத்தகங்களை பரிந்துரை செய்யவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுதவிர பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படும். வாசிப்பை வளர்க்கும் விதமாக குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும். உலக அறிவியல் தினம் (பிப்.28), மகளிர் தினம் (மார்ச் 8) ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

நடப்பாண்டு ‘ரேக்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சிறிய எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் தங்கள் நூல்களை காட்சிப்படுத்தலாம். அதேபோல், நூற்றாண்டு கடந்த பதிப்பாளர்கள் கவுரவம் செய்யப்படவுள்ளனர். முன்னதாக புத்தக வாசிப்பை வலியுறுத்தி ‘மினி மராத்தான்’ நிகழ்ச்சி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நாளை (பிப்.21) நடத்தப்படவுள்ளது.

கரோனா பரவலால் கடந்தாண்டு பல்வேறு இடங்களில் நடைபெறஇருந்த புத்தகக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் புத்தக விற்பனை பெரிதும் சரிந்துவிட்டது. இதனால் பதிப்பாளர்களுக்கு ரூ.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்பு புத்தக காட்சி நடைபெறுவதால் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் ஆ.கோமதிநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x