

திருச்சி கூர்நோக்கு இல்லத்தின் ஜன்னல் கம்பிகளை அறுத்து, 12 சிறுவர்கள் தப்பிச் சென்றனர்.
இளம்வயதில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை நல்வழிப்படுத்துவதற்காக திருச்சி கீழரண் சாலையில் அரசின் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி உட்பட பல்வேறு மாவட்ட போலீஸரால் கைது செய்யப்பட்ட 31 சிறுவர்கள் இந்த இல்லத்தின் முதல்மாடியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு உணவு முடித்துவிட்டு, அனை வரும் உறங்கச் சென்றனர். நேற்று அதிகாலை காவலாளி ராஜா, அவர் களை எழுப்புவதற்காக அறைக்குச் சென்றார். அப்போது 12 பேரை காண வில்லை. அங்குள்ள கழிவறையின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருந்ததால், அதன் வழியாக அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் எனத் தெரியவந்தது. இதுகுறித்து கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சசிமோகன், கோட்டை உதவி ஆணையர் ரமேஷ்பாபு மற்றும் போலீஸார் அங்குசென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தப்பிச் சென்றவர்களில் 4 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள், 3 பேர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மேலும் தேனி மாவட் டத்தைச் சேர்ந்த 2 பேர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், ஒருவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
கூர்நோக்கு இல்ல கண்காணிப் பாளர் மன்னார் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்கள் மதுரை மற்றும் தேனிக்கு விரைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியவர்கள் திருட்டு, கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந் தவர்கள். இவர்களில், மதுரை பெருங் குடி போலீஸாரால் கைது செய்யப் பட்டு, கடந்த வாரம் இங்கு கொண்டு வந்து அடைக்கப்பட்ட ஒருவர்தான், தப்பிச் செல்லும் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கழிவறை ஜன்னல் கம்பிகளை உடைத்து, அதன்வழியாக வெளியே சென்ற சிறுவர்கள், 3 போர்வைகளை கயிறுபோல கட்டி அதன்வழியாக கீழே இறங்கியுள்ளனர். சுற்றுச்சுவர் உயரமாகவும், இரும்புசுருள் முள்கம்பிகள் பொருத்தப்பட்டிருந் ததாலும் அவற்றின்மீது ஏறி தப்பிச் செல்ல வழியில்லை. எனவே, முன் பக்க கதவைத் திறந்து, அதன்வழி யாகவே தப்பியிருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். எனவே, இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி, ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை தல்லாகுளம் போலீ ஸாரால் கைது செய்யப்பட்ட ஒரு சிறுவனை, நேற்று (நவ. 28) அதிகாலை இங்கு கொண்டு வந்து அடைத்துள்ளனர். அந்த சிறுவனை அழைத்து விசாரித்தபோது, தன்னை அறைக்குள் அடைத்தபோதே, பெரும்பாலான பாய் விரிப்புகள் காலியாகக் கிடந்ததாக கூறினார். எனவே, நேற்று முன்தினம் (நவம்பர் 27) நள்ளிரவே 12 பேரும் தப்பியிருக்க வாய்ப்புள்ளது என்றனர்.
இதற்கு முன், கடந்த 2009 மற்றும் 2010-ல் இங்கிருந்து சிறுவர்கள் தப்பிச்சென்றிருந்ததும், இதுவரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்படவில்லை என்பதும் குறிப் பிடத்தக்கது.