

கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் 60 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை இருந்தது. தற்போது ரவுண்டானாவில் மாற்றம் செய்து புதிய காந்தி சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அங்கிருந்த காந்தி சிலை நேற்று அகற்றப்பட்டிருந்தது.
இதையடுத்து, கரூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று திரண்ட காங்கிரஸார் காந்தி சிலை அகற்றப்பட்டது குறித்து நகராட்சி அலுவகத்தில் விசாரித்துள்ளனர். அதற்கு நகராட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலைத் துறை மூலம் அங்கு பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், காந்தி சிலை அகற்றப்பட்டதை கண்டித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லாமல், ஒப்பந்தம், பணியாணை இல்லாமல் எவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன எனக் கேள்வி எழுப்பியும் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.ஸ்டீபன்பாபு உள்ளிட்ட காங்கிரஸார் லைட்ஹவுஸ் பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் திமுகவினரும் பங்கேற்றனர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பேரில், ரவுண்டானாவில் நடைபெற்று வந்த பணிகள் நிறுத்தப்பட்டன. இருப்பினும், பணி ஆணையை காட்டவேண்டும் எனக் கூறி, காங்கிரஸார் போராட்டத்தை தொடர்ந்தனர்.