

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியே காரணம் என பாஜகவின் தமிழக இணை பொறுப் பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அவர், நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் மட்டுமே போராடுகின்றனர். இப்போராட்டத்தை நாட்டின் பிற பகுதி விவசாயிகள் ஆதரிக்கவில்லை. அரியலூர், ஜெயங் கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளை சந்தித்தபோது, புதிய வேளாண் சட்டங்களுக்கு மகிழ்ச்சி யுடன் ஆதரவு தெரிவித்தனர்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் 175 நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நாங்கள் வாக்கு வங்கியை நோக்கி அரசியல் செய்யவில்லை. மக்கள் நலன் சார்ந்த, விவசாயிகளுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டு வருவதில்தான் கவனம் செலுத்துகிறோம்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து மேலிடத் தலைவர்கள் பேசி வருகின்றனர். எங்களின் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்.
பாஜக ஆட்சியில் 9 கோடி பேர் இலவச சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தி வருகின்றனர். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கடந்த கால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் தோல்வியே காரணம். இதில், திமுகவுக்கும் பங்கு இருக்கிறது. ஆனாலும், இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த மாற்று வழியைக் கண்டறிந்து வருகிறோம்.
பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டியில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறது. ஆனால், உபரிவரி உள்ளிட்டவற்றை இழக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான மாநிலங்கள் இத்திட்டத்தை ஏற்க மறுக்கின்றன.
புதுச்சேரியில் அம்மாநில முதல்வரின் நிர்வாக தோல்வி யால்தான் தற்போது அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.