Published : 19 Feb 2021 10:27 PM
Last Updated : 19 Feb 2021 10:27 PM

தமிழக முதல்வர், 4 அமைச்சர்கள் மீது 2ம் கட்ட ஊழல் புகார் பட்டியல்: ஆளுநரிடம் திமுகவினர் ஒப்படைப்பு

சென்னை

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது 2ம் கட்ட ஊழல் புகார்ப் பட்டியலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று (பிப்.19) நேரில் சந்தித்து வழங்கினர் திமுக நிர்வாகிகள்.

இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது இரண்டாவதுகட்ட ஊழல் புகார் பட்டியலை அளித்தார்.

அப்போது, பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., ஆகியோர் இருந்தனர்.

தமிழக ஆளுநரிடம், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அளித்துவிட்டு, ஆளுநர் மாளிகை முன்பு செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் துரைமுருகன், “2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் ஊழல் தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர்மீது யாரேனும் ஊழல் செய்துள்ளார் என்று புகாரினை, ஊழல் தடுப்பு காவல் அதிகாரியிடம், ஊழல் செய்துள்ள அதிகாரியினை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் படைத்த உயர் அதிகாரியிடம், அடுத்தகட்ட விசாரணையை துவக்க அனுமதி பெறவேண்டும்.

ஆனால், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்திற்கு எதிராகவும், ஏமாற்றும் வகையிலும், அமைச்சர்கள்மீது ஊழல் தடுப்பு காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் எந்த ஊழல் புகாரினையும், அவர்களை பதவி நீக்கும் அதிகாரம் படைத்த ஆளுநரிடம் அனுப்பி அனுமதி பெறுவதைத் தடுக்கும் வகையில் ஒரு அரசாணையை 19.12.2018 அன்று பிறப்பித்து உள்ளனர்.

இந்த அரசாணையின் அடிப்படையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்பு அதிகாரியிடம் கொடுக்கப்படும் ஊழல் புகாரினை தங்களுக்கு கீழ் பணிபுரியும் பொதுச் செயலர் எனும் அரசு அதிகாரியிடம், ஊழல் தடுப்பு காவல் அதிகாரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது கொடுக்கப்படும் ஊழல் புகாரினை அனுப்பி எஃப்ஐஆர் பதிவு செய்ய முன் அனுமதி பெறவேண்டும்.
இதன் மூலம் ஊழல் புகார்களை எஃப்ஐஆர் பதிவு செய்யாமல், முறையான, சட்டப்படியான, விசாரணை இல்லாமல், புகார்களைத் தள்ளுபடி செய்துவிடுகின்றனர்.

இந்த மாதிரியான சட்டவிரோத விசாரணைகளில் ஊழல் தடுப்பு காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் ஊழல் புகார்களை, தங்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தும், தனக்கேற்ற அதிகாரிகளை நியமித்தும், சட்டவிரோதமாக ஊழல் புகார்களை மூடிவிடுகின்றனர் அல்லது மூடிவிட முயற்சிக்கின்றனர்.

ஆகவேதான், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில், முறையாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்மீது ஊழல் தடுப்பு காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் புகார்கள்மீது நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநரிடம் நாங்கள் ஆதாரங்களுடன் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்மீது பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் கொடுத்துள்ளோம்.

20.12.2020 அன்று 7 அமைச்சர்கள் மீது சட்டப்படியான, முறையான ஆவணங்களின் அடிப்படையில் ஆதாரங்களுடன் 15 புகார்களை ஆளுநரிடம் கொடுத்திருந்தோம். அன்று பத்திரிக்கையாளர்கள் மூலமாக இது முதல்கட்ட புகார்கள் என்றும், அடுத்தகட்ட புகார்களை ஆளுநரிடம் கொடுப்போம் என்று சொல்லியிருந்தார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

‘சொன்னதை செய்வோம்’ என்பதன் அடிப்படையில், இன்று இரண்டாம் கட்ட புகாரினை முதல்வர் மற்றும் நான்கு அமைச்சர்கள் மற்றும் ஒரு ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது என ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஊழல் புகாரினை ஆளுநருக்கு கொடுத்துள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x