Last Updated : 19 Feb, 2021 08:55 PM

 

Published : 19 Feb 2021 08:55 PM
Last Updated : 19 Feb 2021 08:55 PM

ஆளுநர் தமிழிசை கடிதத்தில் வரலாற்றுப் பிழை; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகார்: விளக்கம் கோரி கடிதம்

ராகுல் கூட்டம் நடந்த சோலை நகர் பகுதிக்கு புயலின் போது படகுகளை அகற்றும் பணியை தான் பார்வையிடும் விடியோவை காட்டும் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி

ஆளுநர் தமிழிசை கடிதத்தில் நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்டுள்ளது வரலாற்றுப் பிழை. இதுபற்றி விளக்கம் கோரி அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று இரவு நடைபெற்றது.

இ்க்கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

"எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி அளித்த கடிதத்தின் அடிப்படையில் பெரும்பான்மையை நிருபிப்பது தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை கடிதம் தந்துள்ளார்.

அக்கடிதத்தில் நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை பதிவேட்டில் நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிடவில்லை.

நியமன எம்எல்ஏக்களை பாஜக என சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை. அதனால் ஆளுநர் எனக்கு அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. அவர்கள் பாஜக என்பதில் ஆதாரம் இல்லை.

இதுபற்றி எனக்கு விளக்கம் தர ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். கட்சி மாறும் தடை சட்டத்திலுள்ள பிரிவொன்றில், நியமன எம்எல்ஏக்களாகி ஆறு மாதத்துக்குள் கட்சியின் பெயரை சேர்க்க உரிமை உண்டு. சேராவிட்டால் அவர் நியமன எம்எல்ஏதான். அதனால் ஆளுநர் தமிழிசை மிகப்பெரிய வரலாற்று பிழை செய்துள்ளார். அதனால் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளேன். இதுபற்றி சபாநாயகரிடம் பேசுவேன் வரும் 21ம் தேதி காங்கிரஸ்-திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. அதில் சட்டப்பேரவையில் கூட்டத்தில் எங்கள் நிலைப்பாடு பற்றி முடிவு எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

நேரடியாக மோதுங்கள் என பாஜகவுக்கு சவால்

ராகுல், புதுச்சேரி வருகையின்போது சோலைநகர் பகுதியில் தென்னந்தோப்பில் மீனவர்களை சந்தித்து உரையாடினார். அப்போது ராகுலிடம் மீனவ பெண்மணி பேசிய போது இப்பகுதிக்கு புயல்காலத்தில் முதல்வர் வரவில்லை என்று குறிப்பிட்டார். அதற்கு நான் இங்கு வந்தேன் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டார். மீனவ பெண்மணி பேச்சை தவறாக நாராயணசாமி மொழி பெயர்த்ததாக சர்ச்சை எழுந்தது, இணையங்களில் இவ்விடியோ பரவியுள்ளது.

இதுபற்றி முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

சமூக ஊடங்களில் நான் ராகுலிடம் பொய் கூறியதாக பரப்புகிறார்கள். இதை காங்கிரஸில் இருந்து வெளியேறியவர்களும், பாஜகவினரும்தான் செய்கிறார்கள். உண்மையில் நிவர் புயலின்போது ராகுல் கூட்டம் நடந்த இடத்துக்கு வந்து படகுகளை கிரேன் மூலம் இடத்தை மாற்றி வைத்தோம். அதற்கான ஆதாரம் உள்ளது (விடியோவை ஒளிபரப்பினார்).

என்னிடம் மோத வேண்டுமானால் நேரடியாக மோதவேண்டும். அதற்கு நான் தயார். முதுகில் குத்தக்கூடாது. நான் இக்கூட்டம் நடந்த இடத்துக்கு வந்ததைதான் ராகுலிடம் கூறினேன். சமூகவலைத்தளத்தில் என் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க நினைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x