மதுரையில் ராமர் கோயில் நிதி வசூல் யாத்திரைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரையில் ராமர் கோயில் நிதி வசூல் யாத்திரைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலிக்க மதுரையில் ரத யாத்திரை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் கட்டும் பணிக்காக உலகம் முழுவதும் வாழும் இந்துக்களிடம் எங்கள் அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டப்படுகிறது.

மதுரை மாநகராட்சியில் நூறு வார்டுகளிலும் ராமர் கோயிலுக்கு நிதி வசூலிக்க பிப். 27 வரை ராமன், சீதாதேவி, ஆஞ்நேயர் விக்ரகங்களுடன் ரத யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம்.

இதற்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் பிப். 13-ல் மனு அளித்தோம். இந்நிலையில் ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்து திலகர் திடல் காவல் உதவி ஆணையர் பிப். 18-ல் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில் கரோனா நோய் பரவலால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டும் ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதனால் கரோனா ஊரடங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதம்.

எனவே ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்து திலகர் திடல் துணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கிறிஞர் ஸ்ரீனிவாசராகவன் வாதிட்டார். பின்னர், மதுரையில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ரத யாத்திரைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in