சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து: முதல்வரின் அறிவிப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்பு

சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து: முதல்வரின் அறிவிப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்பு
Updated on
1 min read

சிஏஏ போராட்டம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த முதல்வர் கே.பழனிசாமியின் அறிவிப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வரவேற்றுள்ளார்.

குடியுரிமைச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக 2019 இறுதியில் தொடங்கி, 2020 மார்ச் மாதம் வரை மாநிலம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றன. கரோனா பரவல் தொடங்கியதை அடுத்து, இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்த நிலையில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாகவும் கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிகளை மீறியதாகவும் ஏராளமானோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு விதிமீறல் ஆகியவற்றுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், குறிப்பிட்ட வழக்குகளைத் தவிர எஞ்சிய வழக்குகளில் மேல் நடவடிக்கை கைவிடப்படுவதாகத் தமிழக முதல்வர் கே.பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வரவேற்றுள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் தள்ளபடி செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளதற்குப் பாராட்டு, நன்றி தெரிவிக்கிறேன்.

குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக 17 மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாகக் குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசும் தீர்மானம் நிறைவேற்றினால் மகிழ்ச்சியாகவும்- வரவேற்புக்கு உரியதாகவும் இருக்கும்’’ என்று காதர் மொகிதீன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in