

‘‘பாஸ்டாக் முறையில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது’’ என கார்த்தி சிதம்பரம் எம்.பி, குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக இன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கல்குறிச்சியில் காங்கிரஸ் சார்பில் மாட்டு வண்டியில் சென்று பொதுமக்களிடம் மனு வாங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கிராமங்கள் தோறும் மாட்டு வண்டியில் சென்று மனுக்கள் வாங்குகிறோம். ஏற்கெனவே எனக்கு வரும் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வைக்கிறேன். அதுகுறித்து மாதந்தோறும் சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறேன்.
கிரிக்கெட்டில் செஞ்சுரி அடித்ததும் பேட்டைத் தூக்கி காட்டுவர். அதேபோல் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததால் பிரதமர், நிதியமைச்சர், பெட்ரோலியத்துறை அமைச்சர் பேட்டை தூக்கி காட்ட வேண்டியது தான். இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான முடிவுகள் தான் காரணம். கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போது கூட, வரியைக் கூட்டி, பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளனர்.
குழப்பமான ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்பிறகு கரோனா ஊரடங்கால் மேலும் வீழ்ந்தது. இதனால் வரியைக் கூட்டிக் கொண்டே செல்கின்றனர். செஸ் அல்லாத மற்ற வரிகளைப் பொறுத்தவரை மாநில அரசுகளுடன் பங்கிட்டு கொள்ள வேண்டும். ஆனால் செஸ் வரி முழுவதையும் மத்திய அரசே வைத்துக் கொள்ளலாம். அதனால் தான் செஸ் வரியைக் கூட்டியுள்ளனர்.
இந்த வரி, மாநிலங்களுக்கு விரோதமானது. அதாவது இந்திய அரசியல் சானத்திற்கு விரோதமானது. பாஸ்டாக் முறையில் ஏராளமான குழப்பம் உள்ளது. பல சுங்கச்சாவடிகளில் ஸ்கேனர் வேலை செய்யவில்லை என கூறி இரடிப்பு கட்டணத்தை வாங்குகின்றனர்.
பாஸ்டாக் முறையில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை அறிவித்து தான் உள்ளனர். இந்த திட்டத்தால் தண்ணீர் வந்தால் தான் வெற்றி. அறிவிப்பால் வெற்றி கிடையாது. தேர்தல் தோல்விக்கு பிறகு ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம் போய்ச்சேரும், என்று கூறினார்.