

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், வருவாய்த் துறை பணிகளில் லேசான பாதிப்பு நேரிட்டுள்ளது.
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் பிப்.17-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். துணை வட்டாட்சியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனி ஊதியம் ரூ.1,300, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூ.9,300 இணையான ஆரம்ப ஊதியம் ரூ.36,900 மற்றும் அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர்கள் ஆகியோருக்குத் தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு அடிப்படைப் பயிற்சி மற்றும் நில அளவைப் பயிற்சி வழங்க வேண்டும்.
பதிவு உயர்வு பெற துறைத் தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதைப்போல், இந்தப் பயிற்சிகளுக்கும் விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனதாரர்களின் பணியை வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கி உத்தரவிட வேண்டும்.
மாவட்டங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், மசால்சி, பதிவுரு எழுத்தர், ஜீப் ஓட்டுநர் ஆகிய பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். பேரிடர் மேலாண்மை துணை ஆட்சியர் பணியிடம் மற்றும் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிங்களை உருவாக்க வேண்டும். குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்.
நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப் படி மற்றும் சரண்டர் விடுப்புகளை உடனே வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் 3-வது நாளான இன்று ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவுவாயில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கலைச்செழியன், மாவட்டப் பொருளாளர் சண்முகவேலன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
காலவரையற்ற வேலைநிறுத்தம் 3-வது நாளாகத் தொடரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இதனால், வருவாய்த் துறை பணிகளில் லேசான பாதிப்பு நேரிட்டுள்ளது. அதேவேளையில், தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.