Published : 19 Feb 2021 06:19 PM
Last Updated : 19 Feb 2021 06:19 PM

ஓபிஎஸ் வந்தால் நிச்சயம் வரவேற்பேன்; அதிமுக, திமுகவுக்கு எதிராக மக்கள் மனநிலை: டிடிவி தினகரன் பேட்டி

சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்தால் நிச்சயம் வரவேற்பேன் என்றும், ஆளுங்கட்சிக்கும் திமுகவுக்கும் எதிரான மனநிலையில் மக்கள் உள்ளதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூருவில் சிறை தண்டனையை முடித்துவிட்டு சென்னை, தியாகராய நகர் வீட்டில் ஓய்வெடுத்து வரும் சசிகலாவை தினகரன் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ''சசிகலாவை இன்னும் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பிப்ரவரி 24-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் அவரின் படத்துக்கு சசிகலா மரியாதை செலுத்துவார். அதன் பிறகு பார்வையாளர்களைச் சந்திக்க ஆரம்பிப்பார். ஏராளமானோர் எங்களின் மீது அச்சம் கொண்டு ஏதேதோ பேசி வருகின்றனர்.

சுதாகரனுக்கு அபராதத் தொகை செலுத்த எங்களால் முடியவில்லை. அதனால் தண்டனைக் காலம் முடிந்தும் அவரால் வெளியே வரமுடியவில்லை. தொகை தயாரானதும் அவர் வெளியே வருவார்.

ஜெயலலிதா காலத்திலேயே ஓபிஎஸ் பரதனாகச் செயல்பட்டார். அவர் மறைவுக்குப் பின்னரும் பரதனாகத்தான் இருந்தார். பிப்ரவரி 5-ம் தேதி அனைவரும் சேர்ந்து சசிகலாவை முதல்வராகச் சொல்லும்போதும் தானாக முன்வந்து சுய விருப்பத்தின் பேரில்தான் ஓபிஎஸ் பரதனாகச் செயல்பட்டார். அவர் ஒரு வாரம் அதே நிலையில் இருந்திருந்தால் சசிகலா பெங்களூரு சிறைக்குச் செல்லும்போது முதல்வர் பதவியைப் பன்னீர்செல்வத்திடமே ஒப்படைத்துவிட்டுச் சென்றிருப்பார். நானே அவரிடம் இதைச் சொல்லி இருக்கிறேன்.

ஆனால் அந்த பரதன் தவறான முடிவெடுத்து ராவணனுடன் போய்ச் சேர்ந்துவிட்டார். அதனால்தான் இன்று ஓபிஎஸ் இந்த நிலையில் உள்ளார். அவர் நிச்சயம் மனக் கஷ்டத்துடன்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்தால் நிச்சயம் வரவேற்பேன்.

கூட்டணி தொடர்பாக பாஜக எங்களிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அதிமுக தொடர்பான வழக்கில் சட்டப்படி எங்களுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆளுங்கட்சிக்கும் திமுகவுக்கும் எதிரான மனநிலை மக்களிடையே உள்ளது. அந்த மனநிலை கொண்ட வாக்காளர்களின் வாக்கு எங்களுக்குக் கிடைக்கும்.

தேர்தலில் நிச்சயம் நாங்கள் போட்டியிட்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை உருவாக்குவோம். அதன்பிறகு அதிமுகவை வருங்காலத்தில் மீட்டெடுப்போம்'' என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x