

கும்பகோணம் மாசி மகம் திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது தொடர்பான மனுவை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கும்பகோணத்தில் 12 ஆணடுக்கு ஒருமுறை மகா கும்ப மேளா நடைபெறும். இவ்விழாவின் போது நாடு முழுவதும் இருந்து கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் புனித நீராட பத்து லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவர்.
அதேபோல் கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் திருவிழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்தாண்டு பிப்ரவரி 26-ல் மாசி மகம் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.
அதே போல் திருவிழாவின் போது பொதுமக்கள், பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூடவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.
பின்னர், மாசி மகம் திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது மற்றும் திருவிழா நாளில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான மனுவை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஒரு வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.