

மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் தங்களது வாழ்கையை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என நலத்திட்ட உதவிகள் வழங்கிய குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வலியுறுத்தினார்.
கரோனா தொற்று நடைமுறைகளைத் தொடர்ந்து நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் தினவிழா மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் 90 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கி பேசினார். அப்போது; உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 3ம் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா தொற்றால் மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாட முடியவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளதால் மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலகத்தின் வாயிலாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை , மனவளர்ச்சி குன்றியோருக்கு பராமரிப்பு உதவித்தொகை, தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, சுய வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மூளை, முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு சக்கர நாற்காலி, காதொலி கருவி, கருப்பு கண்ணாடி, பார்வையற்றோருக்கான திருமணி உதவித்தொகை, செவித்திறன் குறைபாடுடையோருக்கான திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைபாட்டை நினைத்து மனம் தளராமல் சமுதாயத்தில் மற்ற மக்களை போன்று தாங்களும் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ளவும், கல்லூரிகளில் படிப்பவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பயனடையும் விதமாக 59 பயனாளிகளுக்கு ரூ.36.55 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், மேலும் உதவித்தொகைகள் என மொத்தம் 90 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்று தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் தங்களது வாழ்வினை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுகொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மற்றும் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.