விலையைக் குறைக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிள், காஸ் சிலிண்டருக்கு அஞ்சலி; திருச்சியில் சிபிஎம் போராட்டம்

கலைஞர் அறிவாலயம் அருகே காஸ் சிலிண்டருக்கு அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் | படம்: ஜி.ஞானவேல்முருகன்.
கலைஞர் அறிவாலயம் அருகே காஸ் சிலிண்டருக்கு அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் | படம்: ஜி.ஞானவேல்முருகன்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், அவற்றின் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் பிப்.19-ம் தேதி 50 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன் கட்சியின் அந்தந்த பகுதிக் குழு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன் இரு சக்கர வாகனத்துக்கு வெள்ளை நிறத் துணியைப் போர்த்தி, மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வீரமுத்து தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலைஞர் அறிவாலயம் எதிரே பகுதிக் குழு உறுப்பினர் சுபி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் மோட்டார் சைக்கிளுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் மோட்டார் சைக்கிளுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

குழுமணி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைக்கப்பட்டது. அஜித்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் வினோத் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், திருச்சி நகரில் மாம்பலச் சாலை, திருவானைக்காவல், இ.பி. ரோடு, பொன்மலை, டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சல் நிலையம், ஜங்ஷன் உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் துவாக்குடி அண்ணா வளைவு அருகிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலைகளைக் குறைக்க வலியுறுத்தியும், விலை உயர்வு மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in