

புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான உத்தரவில் நியமன எம்எல்ஏக்களை பாஜகவை சேர்ந்தவர்களாக குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸிலிருந்து நான்கு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் 14 பேரும், எதிர்க்கட்சி தரப்பில் 14 பேரும் உள்ளதால் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி துணைநிலை ஆளுநர் தமிழிசை (பொறுப்பு) நேற்று (பிப். 18) உத்தரவிட்டார்.
காங்கிரஸ் கூட்டணியில் 14 பேரும் மக்களால் தேர்வானார்கள், எதிர்க்கட்சி தரப்பில் 11 பேர் மக்களால் தேர்வானார்கள். 3 பேர் மத்திய அரசு மூலம் நியமிக்கப்பட்ட நியமன எம்எல்ஏக்கள் ஆவார்கள். நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்கு உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதில், ஏதேனும் தீர்வை விரும்பினால் உச்ச நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட உத்தரவில் நியமன எம்எல்ஏக்களை பாஜகவை சேர்ந்தவர்களாக குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, அரசு கொறடா அனந்தராமன் கூறுகையில், "புதுவையில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், மக்களாட்சி தத்துவத்துக்கு எதிராகவும் ஒரு அரசியல் பேரம் நடக்கிறது. புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒரு கடிதத்தை முதல்வர் நாராயணசாமியிடம் அளித்துள்ளார். அதில், 'காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவாக 14, எதிர்க்கட்சிக்கு ஆதரவாக 14 எம்எம்ஏக்கள் உள்ளனர். எனவே, தனி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ்-10, திமுக-3, ஒரு சுயேச்சை என மக்களால் தேர்வு செய்யப்பட்ட 14 பேர் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தருகின்றனர். எதிர் தரப்பில் என்.ஆர்.காங்கிரஸ்-7, அதிமுக-4 பேர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். மத்திய அரசு நியமித்த 3 எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்டிருப்பது மிக தவறானது. அரசியலமைப்பு சட்டத்துக்கும், பிரதிநித்துவ சட்டம் 1973 பிரிவு 10-ன்படியும் மிக தவறானது.
எம்எல்ஏ அரசியல் கட்சி சார்பில் தேர்வு செய்யப்படும்போது சின்னம் பெற கட்சித்தலைமை ஏ, பி என இரு படிவம் வழங்கும். வேட்புமனு தாக்கலின்போது படிவத்தை இணைத்து கொடுத்து எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டு அங்கீகாரத்தை பெற முடியும்.
மக்களால் தேர்வு செய்யப்படாத மத்திய அரசால் திணிக்கப்பட்ட 3 எம்எல்ஏக்களை பாஜக என்ற கட்சியின் கீழ் குறிப்பிடுவது அரசியலமைப்பு சட்டம், பிரநிதித்துவ சட்டத்தின் கீழ் தவறான ஒரு செயல். இதனை துணைநிலை ஆளுநர் குறிப்பிட்டிருப்பது சட்டவிரோதமானது.
நியமன எம்எல்ஏக்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வாக்களிக்கும் உரிமை இருந்தாலும், துணைநிலை ஆளுநர் கடிதத்தில் பாஜக என குறிப்பிடுவது தவறானது. சட்டரீதியாக தவறான இந்த கடிதத்தை ஆளுநர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ கூறுகையில், "பலர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து பாஜக-வுக்கு சென்றுள்ளனர். ஆனாலும் திமுக ஆதரவு அளித்துவரும் புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை குறைந்துவிடவில்லை.
அதாவது, தற்போது ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் 25 பேர் உள்ளனர். அதில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு 10 பேரும், அதற்கு ஆதரவு அளிக்கும் திமுக-வுக்கு 3 மற்றும் சுயேட்சை 1 என மொத்தம் 14 பேர் உள்ளனர். அதனால் தற்போது ஆட்சியில் இருப்பதற்கு 13 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே பெரும்பான்மைதான்.
ஆனால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று துணைநிலை ஆளுநரிடம் புகார் அளித்துள்ளனர். அதற்காக துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 3 பேர் பாஜக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நியமன எம்எல்ஏக்களை நியமிக்கலாம் என்றுதான் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதே தவிர, பாஜக உள்ளிட்ட எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எனவே, துணைநிலை ஆளுநர் தனது செய்திக்குறிப்பில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் என குறிப்பிட்டதே பெரிய தவறு.
மேலும், இவரும் ஏற்கெனவே இருந்த துணைநிலை ஆளுநரைப் போல், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக செயல்படாமல், பாஜக நிர்வாகியாகவே செயல்படுவாரோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே, துணைநிலை ஆளுநர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.
இது குறித்து, பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, "நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்டது தவறு என காங்கிரஸார் கூறி வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏக்களாக இருந்தது யார், நாஜிம், கேசவன், அண்ணாமலை, நாரா.கலைநாதன், பாத்திமாபீவி என பலரும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்தான் எம்எல்ஏக்களாக இருந்துள்ளனர். அவர்கள் அரசியல் கட்சியிலும் செயல்பட்டனர். சட்டப்பேரவையில் தற்போது நியமன எம்எல்ஏக்களை பாஜக என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். அதில் தவறில்லை" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அங்கன்வாடிக்கு ஆய்வுக்கு வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் பெரும்பான்மை தொடர்பான கேள்வி எழுப்பியபோது, "அங்கன்வாடிக்கு ஆய்வு வந்துள்ளதால் இது தொடர்பான கேள்விகளுக்கு மட்டும் பதில் தரப்படும்" என்று கூறி தவிர்த்து விட்டார்.