

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது என, மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் இன்று (பிப். 19) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் காலம் தவறி பெய்த கனமழையினால் சாகுபடி செய்யப்பட்ட நெல், உளுந்து, மக்காச்சோளம், எள், நிலக்கடலை, கரும்பு ஆகிய வேளாண் பயிர்கள் 1 லட்சத்து 6,997.26 ஹெக்டேர் பரப்பு நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.
இதில், 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர் சாகுபடி பரப்பினை வேளாண்மைத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து கூட்டாக ஆய்வு செய்து கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, 1 லட்சத்து 23 ஆயிரத்து 421 விவசாயிகளுக்கு ரூ.202.35 கோடி நிவாரணத்தொகை வேண்டி சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
இதுவரை காலம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட 99 ஆயிரத்து 830 விவசாயிகளுக்கு 83 ஆயிரத்து 905.14 ஹெக்டேர் சாகுபடி பரப்புக்கு 164 கோடி ரூபாய் விவசாயிகள் வங்கி கணக்கில் இடுபொருள் நிவாரணத் தொகையாக நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி கோடு எண் ஆகிய விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. எனவே, மீதமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் வங்கி கணக்கில் விரைவில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்படும்".
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.