புதுச்சேரியில் கிரண்பேடியால் 40 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட சாலைத் தடுப்புகள் தமிழிசை உத்தரவால் அகற்றம்

புதுச்சேரியில் கிரண்பேடியால் 40 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட சாலைத் தடுப்புகள் தமிழிசை உத்தரவால் அகற்றம்
Updated on
1 min read

கிரண்பேடியால் 40 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி நகரப்பகுதி சாலைகளை மூடிப் போடப்பட்ட சாலைத்தடுப்புகள் அனைத்தும் புதிய துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவால் இன்று அகற்றப்பட்டன.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராகக் கடந்த 2016 மே மாதம் கிரண்பேடி பொறுப்பு ஏற்றார். அப்போது தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியமைத்து முதல்வராக நாராயணசாமி பொறுப்பு ஏற்றார். தொடர்ந்து மோதல் போக்கே நிலவியதால் மக்கள் நலத்திட்டப் பணிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. கிரண்பேடிக்கு எதிராக கடந்த ஜனவரி 8-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கூட்டணி அறிவித்தது.

இதையடுத்து ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் தடுப்புகள், முள்வேலி வைத்து மூடப்பட்டன. சுமார் ஐந்து கம்பெனி துணை ராணுவப் படையும் பாதுகாப்புக்கு வந்தது. பாரதி பூங்காவும் மூடப்பட்டது. மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இச்சூழலில் மத்திய அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்ட சூழலில் கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டார். புதிய ஆளுநராகத் தமிழிசை பொறுப்பு ஏற்றார்.

இதைத்தொடர்ந்து நேற்று செய்தியாளர்கள் சாலைகளில் தடுப்புகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகக் கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து, "தடுப்புகள் உடனடியாக அகற்றப்படும்" என்று தமிழிசை குறிப்பிட்டார். இந்நிலையில் இன்று காலை 40 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட தடுப்புகள் துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவால் அகற்றப்பட்டன. வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்படவில்லை.

அதேநேரத்தில் ஆளுநர் மாளிகையின் முன்புறமும், பின்புறமும் இரும்புத் தடுப்புகள் மட்டும் தொடர்கின்றன. முன்பெல்லாம் புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகள் ஆளுநர் மாளிகை முன்பு படம் எடுப்பார்கள். முன்பு போல் அனைவரும் ஆளுநர் மாளிகை முன்பு வரை தங்குதடையின்றிச் சுதந்திரமாக செல்ல, ஆளுநர் தமிழிசை உத்தரவிட மக்கள் கோருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in