

சென்னையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்குவதால் போக்குவரத்து தடைபட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
சென்னையில் ரயில் பாதைகளை கடந்து செல்வதற்காக சுரங்கப் பாதைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் கடல், ஆறுகள், ஏரிகளை கடந்து செல்ல தண்ணீருக்குள் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி போன்ற இந்திய பெரு நகரங்களில் ரயில் பாதைகளை கடக்க ஏராளமான சுரங்கப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கெல்லாம் பெருமழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட சுரங்கப் பாதைக்குள் நுழைவதில்லை.
மழை நீர் உள்ளே நுழையாத அளவுக்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படியே தண்ணீர் உள்ளே நுழைந்தாலும் உடனடியாக அவற்றை வெளியேற்றுவதற்கான வழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் எத்தனை நாள்களுக்கு மழை பெய்தாலும் எந்த சிரமமும் இல்லாமல் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியும். ஆனால், சென்னையில் சாலைகளில் வாகனங்கள் செல்லும் அளவுக்கு பெரும் பள்ளம் தோண்டி சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தண்ணீர் உள்ளே வராமல் தடுக்கவோ, உள்ளே வரும் தண்ணீரை வெளியேற்றவோ எந்த வசதியும் இந்த சுரங்கப் பாதைகளில் இல்லை.
இதனால் சிறிதளவு மழை பெய்தாலும் இந்த சுரங்கப் பாதைகளில் பஸ் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் குளம் போல தேங்குகிறது. ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
சென்னை வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை 100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. மத்திய சென்னையை வட சென்னையுடன் இணைக்கும் மிக முக்கியமான இந்த சுரங்கப் பாதைக்கு பதிலாக மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளது.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் கன மழையால் கணேசபுரம் சுரங்கப் பாதையில் குளம்போல தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகள் சென்னை மாநகரில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்த சுரங்கப் பாதையை கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் பொதுமக்களிடம் ரூ.150 பெற்றுக்கொண்டு மீன்பாடி வண்டியில் (3 சக்கர சைக்கிள்) இருசக்கர வாகனங்களை கொண்டு செல்கின்றனர். இதற்காக மீன்பாடி வண்டிகளுடன் ஏராளமான இளைஞர்கள் அந்தப் பகுதியில் காத்திருக்கின்றனர்.
தியாகராய நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, நங்கநல்லூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.