Published : 19 Feb 2021 01:25 PM
Last Updated : 19 Feb 2021 01:25 PM

சிஏஏ போராட்டம், கரோனா ஊரடங்கு வழக்குகள் ரத்து: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் கரோனா ஊரடங்கை மீறியதற்காக மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் கரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதற்காக பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதே போன்று, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது போடப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதை அடுத்து மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கைவிடப்படுகிறது.

மத்திய அரசு ஆயிரத்து 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் குடியுரிமை திருத்த மசோதா-2019- ஐ கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 4 அன்று மக்களவையிலும் 2019-ம் ஆண்டு டிசம்பர் 11 மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது. இதனையடுத்து சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாநிலத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உருவ பொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இப் போராட்டங்களின் போது காவல்துறையினர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து சட்டம் ஒழுங்கை பராமரித்தனர். போராட்டங்களின்போது தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காகவும் சுமார் 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவ்வழக்குகளுல் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவை தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப் படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேப்போன்று கரோனா தொற்று காலத்தில், மத்திய அரசு கரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததை அடுத்து தமிழக அரசும் பொதுமக்க நலன் கருதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதுடன் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் நோய்த் தொற்று நோய் சட்டம் 1937 ஆகிய சட்டங்களின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இதனையடுத்து காவல்துறையினர் மாநிலம் முழுவதும் ஆங்காங்கு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை செய்து ஊரடங்கு முழுமையாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற் கொண்டனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், கரோனா தொற்று தொடர்பாக வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக மாநிலத்தில் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழியில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவை தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொது மக்களின் நலன் கருதியும் மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x