

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் 12-வது துணை வேந்தராக கு. இராமசாமி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஏற்கெனவே பொறுப்பு வகித்தவர் ஆவார். கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதியுடன் பதவிக் காலம் நிறைவு பெற்றதை அடுத்து புதிய துணைவேந்தரை நியமிக்கும் பணி நடைபெற்று வந்தது.
தமிழக ஆளுநர் ரோசய்யா, புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கு, ஊழல் கண்காணிப்புத் துறை முன்னாள் இயக்குநர் வேதநாயகம் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த அக்டோபர் 12-ம் தேதி வரை பெறப்பட்ட 52 விண்ணப்பங்கள் மீது வேதநாயகம் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
இதன்படி, அக்குழுவின் பரிந்துரையின் பேரில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக ஏற்கெனவே பொறுப்பு வகித்த கு.இராமசாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனை அதிகார பூர்வமாக ஆளுநர் கே.ரோசய்யா நேற்றுமுன்தினம் அறிவித்தார். இதையடுத்து, துணை வேந்தராக கு.இராமசாமி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.