

மின்வேலியில் சிக்கிய யானை பலியான வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை அளித்து மேட்டுப்பாளையம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை காப்புக் காடுகள் பகுதிக்குட்பட்ட புறம்போக்கு நிலத்தில் வேலி அமைத்து அமாவாசை, அவரது மகன்கள் கோவிந்தராஜ், கனகராஜ் ஆகியோர் சேர்ந்து விவசாயம் செய்து வந்தனர். வாழைத் தோட்டத்திற்குள் யானைகள் வருவதைத் தடுப்பதற்காக மின்வேலி அமைத்தனர்.
அவர்கள் அமைத்த மின்வேலியில் 2010-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி சிக்கிய ஒரு யானை மின்சாரம் தாக்கி பலியானது. இது தொடர்பாக சிறுமுகை வனச் சரக அதிகாரி அளித்த புகாரில் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதித்துறை நடுவர் எஸ்.பழனி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், “முதல் முறையாக இந்தக் குற்றத்தைச் செய்துள்ளனர். மூவரும் தொடர் குற்றவாளிகள் இல்லை. அதேசமயம் தங்களது நிலத்தில் விளையும் பொருட்களைப் பாதுகாப்பதற்காகவே புறம்போக்கு நிலத்தைப் பயன்படுத்தியுள்ளனர். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை மீறும் எண்ணம் அவர்களுக்கு ஏதும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கோவை மேட்டுப்பாளையம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், அமாவாசை இறந்துவிட்டதால் மகன்கள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.