போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து நல்ல முடிவு: 14-வது ஊதிய குழு பேச்சுவார்த்தையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துறை அதிகாரிகள்,  தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.படம்: எம்.முத்துகணேஷ்
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துறை அதிகாரிகள், தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
2 min read

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து போக்குவரத்து, நிதி துறைகளின் செயலாளர்களுடன் கலந்துபேசி, அதன் அடிப்படையில், முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் நல்ல முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய ஒப்பந்தம் போடப்படும். 13-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019-ல் நிறைவடைந்தது. 2019 செப்டம்பரில் 14-வது ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு அழைக்காததாலும், கரோனா பொது முடக்கம் காரணமாகவும் பேச்சுவார்த்தை தாமதமானது.

எனவே, அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தக் கோரி கடந்தடிசம்பர் 1-ம் தேதி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை பல்லவன் இல்லத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், அரசு பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டு அதற்கான தேதியை அறிவித்தது.

அதன்படி போக்குவரத்து துறைசெயலர் சி.சமயமூர்த்தி தலைமையில் 14-வது ஊதிய ஒப்பந்தம் குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 5-ம் தேதி நடந்தது.

இதில் பங்கேற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே அமைக்க வேண்டும்.அதுவரை இடைக்கால நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சருடன் பேசி முடிவுசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தக் குழுவின் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்பட்டு வரும் தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட 66 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் அமைச்சர் பேசியதாவது:

கடந்தமுறை நடைபெற்ற 13-வதுஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் சார்பில்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலானகோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான சேமநல நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், பங்களிப்பு ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை வழங்குவதிலும் அரசு முனைப்போடு செயல்பட்டு, முதல் கட்டமாக, 2019 மார்ச் முதல் 2020 ஏப்ரல் வரை ஓய்வுபெற்ற 26,120 பணியாளர்களுக்கு ரூ.5,204.24 கோடி வழங்கப்பட்டுள்ளது. கரோனா பேரிடர் காலத்தில், தமிழகத்தில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாத நிலையிலும், தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டது.

இந்த ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் போக்குவரத்து துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் தொடர்புடைய உயர் அதிகாரிகளுடன் கலந்துபேசி, அதன் அடிப்படையில், இது முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் நல்ல முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

செய்தியாளர்களிடம் தொமுசபொருளாளர் நடராஜன் கூறும்போது, ‘‘போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாகமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பேச்சுவார்த்தையில் முன்வைத்தோம். அதுபற்றி அமைச்சர் எதுவும் பேசவில்லை. வரும் 23-ம் தேதிக்குள் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், அன்று அனைத்துதொழிற்சங்கங்கள் கூடி வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in