Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அலைபேசி மூலம் வருகைப்பதிவை பதிவு செய்யும் வசதி அறிமுகம்

சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அலைபேசி மூலம் வருகைப்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் அம்மாப்பேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளில் 2,110 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்களது தினசரி வருகைப்பதிவு அந்தந்த வார்டு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த முறையில் தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையிலேயே வார்டு அலுவலகங்களுக்கு சென்று கைரேகை பதிவு செய்த பின்னர் தாங்கள் பணிபுரியும் பகுதிகளுக்கு சென்று பணிபுரிவதால், கால விரயமும், சிரமமும் ஏற்பட்டு வருகிறது.

இதை தவிர்க்கும் வகையில் அலைபேசி மூலம் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்யும் புதிய நடைமுறை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. புதிய முறையின்படி தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள், வாகனங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் வருகையை குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று அலைபேசி மூலம் பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்யலாம்.

இந்த நடைமுறை முதல்கட்டமாக அம்மாப்பேட்டை மண்டலத்தில் உள்ள 16 வார்டு அலுவலகங்களில் பணிபுரியும் 495 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 17 தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அலைபேசி மற்றும் பயோமெட்ரிக் கருவிகளை தூய்மைப் பணி மேற்பார்வையாளர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வழங்கி புதிய முறையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் திலகா, சுகாதார அலுவலர்கள் மணிகண்டன், மாணிக்கவாசகம், ரவிச்சந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x