

ஓசூரில் குடியிருப்பு பகுதி யில் வலம் வந்த புள்ளி மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதியில் இருந்து வழி தவறிய சுமார் 6 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான், ஓசூர் நகரப் பகுதியில் புகுந்தது. தளி சாலையில் உள்ள அப்பாவு பிள்ளை நகர், ராம்நாயக்கன் ஏரிக்கரை, நேரு நகர் குடியிருப்பு பகுதிகளில் புள்ளிமான் சுற்றி வந்தபடி இருந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள், மான் காலியாக இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்த போது கதவை அடைத்து பிடித்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நடராஜுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் மூலம் வனத்துறையினரிடம் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ஓசூர் வனச்சரகர் ரவி கூறும்போது, ‘‘ஓசூர் வனச்சரக காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதியில் புகுந்த புள்ளிமான் குறித்து தகவல் கிடைத்தது.
உடனடியாக அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் மானை மீட்டு வந்தனர்.மான் வனப்பகுதியில் விடுவிக்கப் பட்டது,’’ என்றார்.