Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

சென்னை பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் ஆப்கன் பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் நேற்று ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகள். படம்: எம்.முத்துகணேஷ்

ஆலந்தூர்

சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ராணுவ அதிகாரிகள் 20 பேருக்கு பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்களால் ஆப்கானிஸ்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டுவர இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளது. இந்திய ராணுவம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்கும் இந்திய ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு கடந்த ஜன. 18-ம் தேதி பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி தொடங்கப்பட்டு, 4 வார பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் மனிதவள மேம்பாடு, வானொலி, மருத்துவப் பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.

நாடுகளுக்கு இடையேயான பயிற்சி பரிமாற்றத்தின் மூலம் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இதில் உடல்ரீதியான பயிற்சி, ஆயுதங்களை கையாளுதல், தந்திரப் பயிற்சி, தலைமை பண்புக்கான பயிற்சி, மனிதவள மேம்பாட்டுக்கான பயிற்சி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இப்பயிற்சி தொடர்ந்து 4 ஆண்டுகளாக 20 பேர் வீதம் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ராணுவ அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x