உணவில் நச்சுத்தன்மை ஏற்பட்டு சிஆர்பிஎப் காவலர் உயிரிழப்பு

உணவில் நச்சுத்தன்மை ஏற்பட்டு சிஆர்பிஎப் காவலர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஆவடி அருகே வீட்டில் சாம்பார் சாதம் சாப்பிட்ட சிஆர்பிஎப் தலைமை காவலர், உணவில் ஏற்பட்ட நச்சுத் தன்மை காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள மிட்னமல்லி பகுதியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ்(53). இவர், ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். வர்க்கீஸ் மனைவி திரசம்மாள்(51). இத்தம்பதிக்கு அமீர்தஜன்(24) என்ற மகன், ஆஸ்பி(21) என்ற மகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் வர்க்கீஸ், தன் மனைவி, மகனுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட சாம்பார் சாதம், முட்டைகோஸ் பொரியல் சாப்பிட்டுள்ளார். அவரது மகள் வயிறு சரியில்லை எனக்கூறி தயிர் சாதம் சாப்பிட்டுள்ளார். சாம்பார் சாதம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வர்க்கீஸ், அவரது மனைவி, மகன் ஆகியோர் வாந்தி எடுத்துள்ளனர். இதனால், அவர்கள் அருகில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை மருத்துவ மையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக வர்க்கீஸ், திரசம்மாள், ஆமீர்தஜன் ஆகியோர் சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை வர்க்கீஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திரசம்மாள் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அமீர்தஜன் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் முத்தாபுதுப்பேட்டை போலீஸார், ‘உணவில் நச்சுத்தன்மை காரணமாக வர்கீஸ் உயிரிழந்திருக்கலாம்’ என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in