Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

தமிழிசை தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது தமிழுக்கு பெருமை: அமைச்சர் கந்தசாமி பேச்சு

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்த சேலியமேடு கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய கட்டிடத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் பல்நோக்கு கைவினைபயிற்சி மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஊக்க தொகையுடன் தொழில்முனைவோருக்கு இலவச கைவினை பயிற்சிகள், காளான் வளர்ப்பு, ஆடை வடி வமைப்பு, சுடுமண் சிற்பங்கள், மண்பாண்டங்கள், காகித சிற்பங்கள் மற்றும் பல கைவினை பயிற்சிகள் ஆகியவை கலாக்ராம் தொழிற்பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்றது.

அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

சுதந்திரம் கிடைத்த பிறகு புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட எவரும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டது இல்லை. தற்போது தமிழிசை சவுந்தர்ராஜன் தமிழில் பதவி பிரமாணம் ஏற்றிருப்பது தமிழுக்கு கிடைத்த பெருமை.

நம்மால் 30 விநாடிகளில் களிமண்ணில் விநாயகர் சிலையை செய்ய முடிகிறது. அப்படியானால் மனிதனாக பிறந்த ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை 30 விநாடிகளில் தெரிந்து கொள்கிறோம்.

அந்த திறமையை நாம் வெளிப்படுத்துவதில்லை. 99 சதவீதம் பேர் திறமையானவர் களாகவும், நல்ல சிந்தனை உடைய வர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் மீதமுள்ள 1 சதவீதத்தினர் அவர்களையெல்லாம் வீணாக்கி விடுகிறார்கள். சிந்தனையை சிதராமல் எடுத்துச் சென்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும்.

இன்னும் 10 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். 2 மாதங்களில் வெற்றி தோல்வி தெரிந்துவிடும். யார் முதல் வராவார்? யார் அமைச்சராவார்? யார் எம்எல்ஏ என்பதெல்லாம் மக்களால் நிர்ணயிக்கப்படும்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டது நமக்கு பெருமை. கிரண்பேடி நீக்கப்பட்டதை அறிந்த 4 வயது குழந்தை கூட ஆட்டம் போட்டதாம்.

அப்படியானால் கிரண்பேடியின் செயல்பாடுகள் 4 வயது குழந்தைக்கு கூட ஒலித்திருக்கிறது.

இந்த 5 ஆண்டுகாலத்தில் புதுச்சேரி 20 ஆண்டுகாலம் பின்நோக்கி சென்றுவிட்டது. திட்டங்களை செய்ய முடியாத வகையில் தடை இருந்தது. அந்த தடை இருதினங்களுக்கு முன்பு முடிந்து, விடுதலை கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் மற்ற தொகு திகளைவிட நம்முடைய தொகுதிதான் முன்னேற்றத்தில் இருக்கிறது என்றார்.

நிகழ்ச்சியில் துறையின் செயலர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x