Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலின்போது விதிகளை மீறி மதுபானம் விற்கும் கடைகளுக்கு சீல்: துணை ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரியில் வருகின்ற சட்டப் பேரவை தேர்தல் விதிமுறையில் குறிப்பிடப்படும் காலத்தை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என கலால்துறை துணை ஆணையர் சுதாகர் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி அரசு கலால்துறையில் மதுபான ஆலை, மொத்த மற்றும் சில்லரை விற்பனை உரிமம் பெற்றவர்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளின் உரிமதாரர்கள் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் நேற்று தட்டாஞ்சாவடியில் உள்ள கலால்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் துணை ஆணையர் சுதாகர் தலைமை தாங்கி பேசியதாவது:

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் மதுபானம், சாராய மற்றும் கள்ளுக்கடைகள் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கலால்துறை சட்ட விதிமுறை களை முறையாக பின்பற்றி நடக்க வேண்டும். தேர்தல் விதிமுறையில் குறிப்பிடப்படும் காலத்தை மீறி சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு மீறினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடைக்கும் சீல் வைக்கப்படும்.

தினமும் வரவு செலவு கணக்கு களை முறையாக பராமரிக்க வேண்டும்.

மிக முக்கியமாக அனைத்து மதுபானக் கடைகள், சாராயம், கள்ளுக்கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

அனைத்து தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், பறக்கும் படை அதிகாரிகள், செக்டர் அதிகாரிகள் ஆகியோருக்கு கலால் ஆய்வாளர் அதிகாரம் வழங்கப்பட உள்ளது. எனவே, அனைவரும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை மிக நேர்மையான முறையில் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இக்கூட்டத்தில் தாசில்தார்கள் ரவிச்சந்திரன், பாலகிருஷ்ணன் மற்றும் கலால்துறை அதிகாரிகள், மதுபான ஆலை, மொத்த மற்றும் சில்லரை விற்பனை உரிமம் பெற்றவர்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளின் உரிமதாரர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x