Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

திமுக ஆட்சிக்கு வந்ததும் மூல வைகையில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை: தேனி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீர் சேமிப்பை அதிகரிக்கும் வகையில் மூல வைகையில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

உத்தமபாளையத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்னும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் பொதுமக்கள் அளித்த மனுக்களின் அடிப்படையில் ஸ்டாலினிடம் பேச சிலர் அனுமதிக்கப்பட்டனர்.

வடுகபட்டி சுந்தரராஜ்: வெற்றிலைக் கொடிகளை வாடல் நோய் தாக்கி நலிவடைந்து விட்டது. இந்த விவசாயத்துக்கு வங்கிக் கடனும் தருவதில்லை. நல வாரியம் அமைக்க வேண்டும்.

ஸ்டாலின்: திமுக.ஆட்சிக்கு வந்ததும் நல வாரியம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

மீனாட்சிபுரம் வினோதினி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்தவித வசதியும் இல்லாமல் உள்ளது.

ஸ்டாலின்: ஏற்கெனவே உள்ள அரசு கட்டிடங்களுக்கு பச்சை பெயின்ட் அடித்து புதிதாகத் திறந்ததுபோல அதிமுகவினர் நாடகமாடி வருகின்றனர். பிரச்சினைகளைத் தொடர்ந்து கூறியும் அவற்றை நிறைவேற்றாத சட்டப் பேரவை உறுப்பினராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார்.

ஊஞ்சாம்பட்டி நந்தினி: எனது ஒன்றரை வயது குழந்தை யாழினி யின் இதயத்தில் ஓட்டை உள்ளது. ரேஷன் கார்டு இல்லாததால் அரசு காப்பீட்டிலும் சிகிச்சை பெற முடியவில்லை. தனியாரில் சிகிச்சை பெற வசதி இல்லை.

ஸ்டாலின்: இந்தக் குறையை சரி செய்ய நூறு நாள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக கூட்டத்தில் கூறப்பட்ட மனு என்ற பார்வையைக் கடந்து இவருக்கு அரசு உதவ வேண்டும். 2 நாளில் செய்யாவிட்டால் திமுக.வே உங்கள் மகள் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து தரும்.

கடமலைக்குண்டு வனிதா: எங்கள் பகுதியில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே மூலவைகையில் தடுப் பணைகள் கட்ட வேண்டும்.

ஸ்டாலின்: பாசனம், குடிநீருக் கான முக்கிய ஆதாரமாக மூல வைகை உள்ளது. கோடைகால நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மூல வைகையில் தேவைப்படும் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படும்.

விருது

பின்னர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் 2-ம் இடம் பெற்ற தேவி, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தில்லை நடராஜன், குழாய் மூலம் கண்மாய்களுக்கு நீர் கொண்டு செல்லும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த பொறியாளர் ஷியாமளா, நீளம் தாண்டுதலில் மூன்று முறை வெற்றி பெற்ற கிஷோர், தேசிய இளையோர் போட்டியில் வெற்றி பெற்ற ஹரிபிரசாத், டேபிள் டென்னிஸில் வெற்றி பெற்ற சத்யநாராயணன், தேசிய யோகா போட்டியில் வென்ற சத்யபாலா, மாவட்ட கவிதைப் போட்டியில் முதலிடம் பிடித்த அபர்ணா, கராத்தே வீராங்கனை ரவீனா, ஸ்கேட்டிங் பிரசாத் ஆகியோருக்கு ஸ்டாலின் கதராடை போர்த்தி கோப்பைகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x