அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் குழந்தைகளுக்கான மனமகிழ் மன்றங்கள் திறப்பு: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஏற்பாடு

அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் குழந்தைகளுக்கான மனமகிழ் மன்றங்கள் திறப்பு: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஏற்பாடு
Updated on
1 min read

திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘மனமகிழ் மன்றத்தின்’ திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் மாவட்டம் மற்றும் வட்டங்கள் வாரியாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மகளிர் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோர், தங்களது குழந்தைகளையும் உடன் அழைத்து வர வேண்டிய கட்டாயம் சிலருக்கு ஏற்படுகிறது. குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு காவல் துறை அதிகாரிகளுடன் வழக்கு தொடர்பாக பேசவும், அதற்கான விளக்கமளிக்கவும் பெற்றோர் அதிக சிரமத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, குழந்தைகளுக்கு காவல் நிலையங்கள் மீதும், காவலர்கள் மீது உள்ள பயத்தை போக்கவும், பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பயமில்லாமல் காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க குழந்தைகளுக்கென மனமகிழ் மன்றங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கான ‘மனமகிழ் மன்றம்’ அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் பிரேமா வரவேற்றார். வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் பிரேமாவின் மகள் திவ்யபிரீத்தா குழந்தைகளுக்கான மனமகிழ் மன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் கூறும்போது, "காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்கவும், விசாரணைக்காகவும் பெரியவர்கள் வரும்போது தங்களது குழந்தைகளையும் சிலர் அழைத்து வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. குழந்தைகள் காவல் நிலையம் வரும்போது, அவர்களுக்கு காவல் நிலையம் என்ற பயம் இருக்கக்கூடாது என்ற நோக்கில் மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பாலியல் பிரச்சினைகளை சந்திக்கும் சிறுமிகள் மனமகிழ் மன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கு சீருடை அணியாத பெண் காவலர்கள் தனியாக விசாரணை நடத்த இது போன்ற மனமகிழ் மன்றங்கள் பெரும் உதவியாக அமையும். திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது 3 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கான மனமகிழ் மன்றம் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் படிப்படியாக அனைத்து காவல் நிலைங்களிலும் இது போன்ற மனமகிழ் மன்றங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in