Published : 18 Feb 2021 09:12 PM
Last Updated : 18 Feb 2021 09:12 PM

ரேஷன் கடைகளில் வெல்லம் விற்பனை, இலவச மின்சாரம்- அரசுக்கு வெல்லம் உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் 

அணியாலை கிராமத்தில் வெல்லம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

திருவண்ணாமலை 

ரேஷன் கடைகளில் அரசு பொதுமக்களுக்கு வெல்லம் வழங்கினால், எங்களது வாழ்வாதாரம் மேம்படும் என வெல்லம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயம் நிறைந்த திருவண்ணாமலை மாவட்டத்தில், நெல்லுக்கு இணையாகக் கரும்பு சாகுபடியும் கணிசமாக உள்ளது. கரும்பு சாகுபடிக்கு உறுதுணையாக, வெல்லம் உற்பத்தியும் தலைமுறைகளைக் கடந்து வெற்றி நடைபோடுகிறது.

கலசப்பாக்கம், அணியாலை, காம்பட்டு, செண்பகத்தோப்பு, படவேடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் நாட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் பல குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து கிராமத்தினர் கூறும்போது, “வெல்லம் தயாரிக்க 17 மணி நேரம் செலவிடப்படுகிறது. அரவை இயந்திரத்தில் கரும்பை அரைத்து, சாறு பிழிந்தெடுக்கப்படுகிறது. பின்னர், அதனைக் கொப்பரையில் ஊற்றி, மிதமான சூட்டில் வெல்லம் தயாரிக்கிறோம். கொப்பரையில் பதப்படுத்தி பாகு எடுப்பதற்கு மட்டும் 5 மணி நேரம் செலவிடப்படுகிறது. அதன்பிறகு, அதனை உருண்டை பிடித்து உலர வைக்கிறோம். இதற்காகக் குடும்பம் குடும்பமாக உழைக்கிறோம்.

இயந்திரத்தில் கரும்பு சாறு பிழிந்தெடுக்கப்படுகிறது.

விலகிச் செல்ல மனமில்லை

அதே நேரத்தில் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைப்பதில்லை. இதனால், இந்தத் தொழிலில் இருந்து பலர் வெளியேறிவிட்டனர். அவர்கள் எல்லோரும் கூலி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

வெல்லத்தைக் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள், குறைந்த விலைக்குக் கேட்கின்றனர். ஒரு மூட்டை வெல்லம் (75 கிலோ) அதிகபட்சமாக ரூ.2,200 விலை போகிறது.

இதனால் சராசரிக் கூலி கூடக் கிடைப்பதில்லை. பல தலைமுறைகளாக, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளதால், இதிலிருந்து விலகிச் செல்ல மனமில்லை.

வெல்லம் உற்பத்தி செய்யும் தொழிலாளர் குடும்பங்களையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு வழங்குவது போல், எங்களுக்கும் இலவச மின்சாரம் அல்லது மின்சாரத்தைச் சலுகை அடிப்படையில் வழங்க வேண்டும். மேலும், ரேஷன் கடைகளில் வெல்லம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும். இதனால், எங்களது வாழ்வாதாரம் மேம்படும். எங்களது கோரிக்கையைத் தமிழக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x