Last Updated : 18 Feb, 2021 09:04 PM

 

Published : 18 Feb 2021 09:04 PM
Last Updated : 18 Feb 2021 09:04 PM

நெற்கதிரில் கூடு கட்டி முட்டையிட்ட குருவி: கூட்டைக் கலைக்காமல் நெல் அறுவடை செய்த விவசாயி

கும்பகோணம்

தன் வயலில் உள்ள நெற்கதிரில் கூடு கட்டிக் குருவி ஒன்று முட்டையிட்டு வந்ததால், குருவிக் கூட்டை கலைக்காமல் அறுவடை செய்த விவசாயி செயலை கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் ரங்கநாதன் (40). இவர் தனது மூன்று ஏக்கர் வயலில் நெல் சாகுபடி செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அறுவடை இயந்திரத்தைக் கொண்டு, நெல் அறுவடை செய்ய வயலுக்கு வந்தார். அப்போது வயல் வரப்பினைச் சுற்றிப் பார்த்தபோது, மூன்றடி உயரத்தில் நெற்கதிர்களுக்கு இடையே குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. அதன் அருகில் சென்று பார்த்தபோது கூட்டில் நான்கு முட்டைகள் இருந்தன.

இதையடுத்து ரங்கநாதன் கூட்டைக் கலைக்காமல் நெல்லை அறுவடை செய்யத் திட்டமிட்டார். பின்னர் கூடு இருந்த இடத்தினை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடங்களில் இயந்திரம் மூலம் அறுவடை செய்தார். குருவிக் கூடு இருந்த நெற்கதிர் கீழே சாய்ந்து விடாமல் இருக்க இரண்டு கம்புகளைக் கொண்டு சேர்த்துக் கட்டியுள்ளார்.

குருவியின் கூட்டைக் கலைக்காமல், அந்த குருவி அங்கேயே வாழ்வதற்கு ஏற்ற வகையில், அறுவடை செய்த விவசாயி ரங்கநாதனின் செயலைக் கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

இதுகுறித்து ரங்கநாதன் கூறுகையில், ’’நான் 3 ஏக்கரில் சி.ஆர்.1009 நெல் ரகத்தைச் சாகுபடி செய்திருந்தேன். நேற்று நெல் அறுவடை செய்யச் சென்றபோது, வயலில் குருவிக் கூடு இருந்தது. அதில் 4 முட்டைகளும் இருந்த நிலையில் குருவி பறந்து சென்றது. இதையடுத்து குருவிக் கூட்டைக் கலைக்காமல் அறுவடை செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். நெற்கதிர்களை இணைத்து குருவி கூடு கட்டியிருந்ததால் அந்த இடத்தை விட்டுவிட்டு அறுவடை செய்தேன். பின்னர் குருவிக் கூடு இருந்த இடம் கம்புகளைக் கொண்டு கீழே சாய்ந்துவிடாமல் சேர்த்து வைக்கப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

கும்பகோணம் அருகே சாத்தனூர் கிராமத்தில் குருவிக் கூட்டை கலைக்காமல் அறுவடை செய்த விவசாயி வயல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x