

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு வண்டியூர் திடலில் நடக்கிறது.
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அறிமுகப்படுத்திய தோழர் சிங்கார வேலரின் பிறந்த நாள் இன்று என்பதால் அவரது திரு உருவப்படம் மேடையில் வைக்கப்பட்டு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மேடையின் பின்னணியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் படமும், கைச்சிலம்புடன் கண்ணகி நீதி கேட்கும் படமும், தமிழகத்தை மீட்போம் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
மேடையையொட்டி தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பெரிய கட்-அவுட்கள் இடம் பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, டி.ராஜா உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கட் அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன.
போலீஸாருக்கு வேலை வைக்காத வகையில், செம்படை தொண்டர்களே செய்திருந்தனர். மாநாட்டுத் திடலில் கம்யூன்ஸ்ட் கட்சியின் முன்னோடிகளான சீனிவாச ராவ், சிங்காரவேலர், ஜீவா, கே.டி.கே.தங்கமணி ஆகியோருக்கும் கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை.
மத்திய மாநில அரசுகளைக் கேலி செய்யும் கார்ட்டூன்களும் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தன. மேடை எளிமையாக காட்சி அளித்தது.
மாநாடு தொடங்கும் போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, நல்லகண்ணு, இரா.முத்தரசன் ஆகியோருடன் மனிதநேய மக்கள் கட்சி பேரா.ஜவாஹிருல்லாவும் மேடைக்கு வந்து விட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் வைகோவும் வந்தார். மற்ற தலைவர்கள் கொஞ்சம் தாமதமாகவே மேடைக்கு வந்தனர். மாநாடு தொடங்கியதும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுக, ஏழு தமிழர் விடுதலை, போராடும் உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேறின.
பெட்ரோல் டீசல் கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை மொத்த கூட்டமும் ஆரவாரத்துடன் கை தட்டி நிறைவேற்றிக் கொடுத்தது.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை மொத்த கூட்டமும் ஆரவாரத்துடன் கை தட்டி நிறைவேற்றிக் கொடுத்தது.