Published : 18 Feb 2021 17:38 pm

Updated : 18 Feb 2021 17:40 pm

 

Published : 18 Feb 2021 05:38 PM
Last Updated : 18 Feb 2021 05:40 PM

எம்எல்ஏக்களை விலைபேசி புதுச்சேரி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சி; ஒவைசியுடன் கூட்டணியா?- எஸ்டிபிஐ தெஹ்லான் பாகவி பேட்டி

bjp-attempts-to-overthrow-puducherry-government-by-bribing-mlas-alliance-with-owaisi-t-ehlan-bhagvi
கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தெஹலான் பாகவி | படம்: ஜெ.மனோகரன்.

கோவை

சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைபேசி, புதுச்சேரியில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருவதாக, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்தார்.

இதுகுறித்துக் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


''எஸ்டிபிஐ கட்சி சாதி, மதம் சாராமல் அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைக்காகப் போராடி வருகிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக உள்ளதால் அவர்களை எதிர்க்கிறோம். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வர உள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியுடன் பாஜக கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. அதிமுக மீது குதிரை சவாரி செய்து வெற்றிபெற்று விடலாம் என்று பாஜக நினைக்கிறது. அதிமுகவையும், பாஜகவையும் மக்கள் தோற்கடிப்பார்கள். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணியுடன் கூட்டணி சேர்ந்து இவ்விரு கட்சிகளையும் தோற்கடிப்போம்.

மதச்சார்பற்ற கட்சியுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எங்கள் கட்சி பிரதிநிதித்துவம் பெற்று சட்டப்பேரவைக்குச் சென்று உரிமைக்காகப் போராடுவது அவசியம். அடுத்த மாதம் கட்சியின் பொதுக்குழு கூடி, கூட்டணி தொடர்பான இறுதி முடிவை எடுக்கும். ஒவைசி உள்ளிட்டவர்களுடன் கூட்டணி சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கும் திட்டம் இல்லை.

பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது. இதேபோல் விலைவாசியும் உயர்ந்து வருகிறது.

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தானுக்கு எதிராகவோ, சீனாவுக்கு எதிராகவோ பாஜக அரசு 'சர்ஜிகல் ஸ்டிரைக்' செய்யவில்லை. மக்களுக்கு எதிராக துல்லியமான 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடத்தி வருகிறது. ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள். இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

புதுச்சேரியில் இதுவரை ஆளுநராக கிரண்பேடியை இருக்கச் செய்து, அம்மாநில மக்களுக்கு வேண்டிய உரிமைகளைச் செயல்படுத்தாமல் தடுத்த மத்திய அரசு, தற்போது அந்த மாநில எம்எல்ஏக்களை விலைபேசிக் கவிழ்க்கும் சூழ்ச்சி செய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அந்த மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதிலும் சூழ்ச்சி உள்ளது. புதுச்சேரி மக்கள் இந்த சூழ்ச்சியை முறியடிப்பார்கள்.

தமிழ்நாட்டில் ஆளும் அரசு, அரசியல் கூட்டங்களுக்கு விளம்பரப் பதாகைகளை வைக்கிறது. இதனைக் கண்டுகொள்ளாத காவல்துறை மற்ற கட்சியினர் வைப்பதற்குக் கடும் நெருக்கடிகளை அளிக்கிறார்கள். இது கண்டனத்துக்குரியது. தேர்தல் வரும் நிலையில் ஆளும் கட்சிக்குச் சார்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதனைக் கண்டிக்கிறோம்.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டம் பெயரில் பல்வேறு இடையூறுகள் நடைபெறுகின்றன. திட்டப் பணிகளும் முழுமையாக முடிக்கப்படவில்லை. மேலும், சிறுபான்மையினர், கிறிஸ்தவர்கள், தலித் மக்கள் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி என்று ஒரு சில பகுதிகளில் மட்டும் திட்டங்களை நிறைவேற்றும் பாரபட்சமான போக்கு கண்டிக்கத்தக்கது''.

இவ்வாறு தெஹ்லான் பாகவி தெரிவித்தார்.

தவறவிடாதீர்!


தேர்தல் 2021எஸ்டிபிஐதெஹலான் பாகவிஎம்எல்ஏபுதுச்சேரி ஆட்சிபாஜக முயற்சிஒவைசியுடன் கூட்டணிBJPMLA

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x