Published : 18 Feb 2021 03:39 PM
Last Updated : 18 Feb 2021 03:39 PM

பல்கலைக்கழகங்களில் அறிவியலுக்குப் புறம்பான பாடத்திட்டம்; அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: கி.வீரமணி விமர்சனம் 

சென்னை

தங்கள் கையில் ஆட்சி சிக்கிக்கொண்டது என்பதனால் தங்களது பசு வழிபாட்டுக் கொள்கையை பாடப் புத்தகங்களில் விஞ்ஞானப் போர்வையும் அதற்குப் போர்த்தி, அதில் தேர்வு எழுதி பல்கலைக்கழக மாணவர்கள் பட்டதாரிகளாக வெற்றிபெற பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்புவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள கண்டன அறிக்கை:

“மத்திய அரசாகிய, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இப்போது ஒரு புதுவிதமான வித்தையை அதிகாரபூர்வமாகவே கையாண்டு வருகிறது. விஞ்ஞானத்தையே கேலிக் கூத்தாக்குகிறார்கள். மத நம்பிக்கைகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். கொள்கைத் திட்டங்களை மக்கள் மீது திணிக்கும் முயற்சிகளுக்கும் அறிவியல் சாயம் பூசி, விஞ்ஞானத்தையே கேலிக் கூத்தாக்குகிறார்கள்.

அகில உலக (பன்னாட்டு) விஞ்ஞானிகள் மாநாடு முன்பு மும்பையில் நடந்தபோது, உலகெங்குமிருந்து மும்பையில் கூடிய விஞ்ஞானிகள் அதிர்ந்துபோகும் அளவுக்கு, ‘‘விநாயகர் காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி தெரிந்திருந்தது என்பதற்கு ஆதாரம் விநாயக புராணம்‘’ என்பது போன்ற அபத்தமான கருத்துகளை பிரதமர் கூறக் கேட்டனர்.

நோபல் பரிசு பெற்று இன்று இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் உள்ள வெங்கட் ராமகிருஷ்ணன், இந்த மாதிரி அபத்தமான கருத்துகளைக் கேட்க இனி இந்தியா பக்கமே வரமாட்டேன் என்று வேதனையோடு கூறினார். இதைவிட மகாவெட்கக் கேடு வேறு என்ன?

தங்கள் கையில் ஆட்சி சிக்கிக்கொண்டது என்பதனால் தங்களது பசு வழிபாட்டுக் கொள்கையை பாடப் புத்தகங்களில் விஞ்ஞானப் போர்வையும் அதற்குப் போர்த்தி, அதில் தேர்வு எழுதி பல்கலைக்கழக மாணவர்கள் பட்டதாரிகளாக வெற்றி பெற பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்புகிறது.

சட்ட நெறிமுறைக்கே எதிரானது

மதச்சார்பற்ற (Secular) கொள்கையான இந்திய அரசியல் சட்டம் வகுக்கும் நெறிமுறைக்கே அது முற்றிலும் எதிரானது என்றாலும்கூட, ‘‘பசு மாட்டுச் சாணமும், அதன் கோமியமும் கரோனா தொற்றிலிருந்து 800 பேரை குணப்படுத்தி இருக்கிறது. பசு மாடுகள் கொல்லப்படுவதால்தான் பூமி அதிர்வுகள் ஏற்படுகின்றன.

போபால் விஷ வாயுவால் தாக்கப்பட்டபோது, பசு மாட்டுச் சாணம் பூசப்பட்ட வீடுகளில் இருந்தவர்களை அந்த மாட்டுச் சாணம் விஷவாயுவை முறியடித்துப் பாதுகாத்தது. பசு மாட்டின் பால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்குக் காரணம், அதில் தங்கத்தின் துகள்கள் கலந்திருக்கின்றன.’’

மோடி அரசு இலக்கு நிர்ணயித்திருக்கும் 5 டிரில்லியன் பொருளாதாரத்தில் பசு மாடு முக்கிய பங்காளருமாம், ‘மாட்டிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம் உள்ளிட்ட 5 பொருள்கள் ‘புனித’மானவை. இவை இதயத்திற்கு மருந்தாகும். ரத்தத்தைச் சுத்திகரித்து, வாத, பித்த, கப தோஷங்களைச் சரிப்படுத்தும்.

எல்லா நோய்களையும் குணப்படுத்தும் பசுவின் சாணத்தில் செல்வம் அளிக்கக்கூடிய மகாலட்சுமி உறைகிறாள்’’ என்றெல்லாம் தேர்விற்கான பாடத்திட்டத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் படித்து இனிமேல் நம் மாணவர்கள் விஞ்ஞானிகளாக மலர இருக்கிறார்களாம். இது மட்டுமா? இன்னும் படியுங்கள்

பசுவின் நிறத்திற்கேற்ப அதன் சாணத்தின் மருத்துவ குணம் மாறுமாம். ‘‘சொரியாசிஸ் முதல் பக்கவாதம் வரை அனைத்து வியாதிகளையும் இந்த சாணம் சரி செய்துவிடும்‘’ என்றும் எழுதப்பட்டுள்ளது.

பாலின் சிறப்பு, ஊட்டச்சத்து பற்றிச் சொல்லும்போது, பசுவுக்கு ஓர் உயர் அந்தஸ்து - அறிவியல் ரீதியாக என்பதைவிட, இந்துத்துவா கருத்தியல் அடிப்படையில் (கோமாதா குலமாதா) அதே நேரத்தில் எருமை மாட்டிற்கு அதே அளவுக்கு முக்கியத்துவம் தராத நிலைக்கு எது அடிப்படை?

இதற்கு முன் இந்திய விஞ்ஞானிகள் அமைப்பு, இந்த கோமியம், பசு மாட்டு சாணம் நோய் தீர்க்கும் என்ற புரட்டைக் கேள்விக்குள்ளாக்கியதை அறவே புறந்தள்ளி, அலட்சியப்படுத்திவிட்டு, இதைப் பல்கலைக்கழக மானியக் குழுவே பாடத் திட்டமாக்கி, தேர்வுக்குரியதாக்கி மாணவர்கள் மூளையை இப்படிக் காயப்படுத்தலாமா?

அந்த சக்தி இருக்கிறது என்பதை உலக அறிவியல் ஆய்வு ஏடுகளின் ஆராய்ச்சியாளர்களாக எழுதும், சோதனைகளில் ஈடுபடும் அறிவியலாளர்கள் - விஞ்ஞானிகள் ஏற்கிறார்களா?

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளின் 51-ஏ(எச்) பிரிவு, அறிவியல் மனப்பான்மையை ஒவ்வொரு குடிமகனுக்கும் பரப்ப வேண்டுமெனக் கட்டளையிட்டுள்ளது. அதைப் பரப்பும் லட்சணமா இது? பரப்பாவிட்டாலும்கூட பரவாயில்லை, நேர்மாறான அபத்த மூடநம்பிக்கைச் சேற்றை இளம் மாணவர் மூளையில் அப்பலாமா? வெட்கம், வேதனை”.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x