Last Updated : 18 Feb, 2021 12:35 PM

 

Published : 18 Feb 2021 12:35 PM
Last Updated : 18 Feb 2021 12:35 PM

யாரும் ஒடுக்கப்பட மாட்டார்கள்; எனக்கு 'ஈகோ' இல்லை: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேட்டி

காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்ட தமிழிசை. | படம்: எம். சாம்ராஜ்.

புதுச்சேரி

அனைவரின் அதிகாரமும் எனக்குத் தெரியும். யாரும் ஒடுக்கப்பட மாட்டார்கள் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்ற தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியைக் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.16) இரவு திடீரென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீக்கி உத்தரவிட்டார். இதையடுத்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் புதுவை மாநில துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு தரப்பட்டது.

இதையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இன்று (பிப்.18) தமிழிசை பொறுப்பேற்ற பிறகு ராஜ்நிவாஸில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளார்களே?

மனு அளித்தது தெரியும். இனிமேல்தான் அந்த மனுவைப் பார்க்க உள்ளேன். பல தலைவர்கள் என்னைப் பார்க்க அனுமதி கேட்டுள்ளனர். நான் சமமானவள், பொதுவானவள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, பொதுமக்கள் என அனைவரையும் பார்க்க நேரம் ஒதுக்குவேன். வித்தியாசம் பார்க்க மாட்டேன். எதிர்க்கட்சிகள் அளித்த மனுவை அலசி ஆராய்ந்து சட்ட விதிக்கு உட்பட்டுச் செயல்படுவேன்.

மத்திய அரசு 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. ஆனால், புதுவையில் ரேஷன் கடைகள் இல்லையே?

புதுவைக்கு வந்ததும் மக்களின் பொருளாதார நிலை என்ன? எனக் கேட்டேன். வறுமைக்கோட்டுக்குக் கீழ், வறுமைக்கோட்டுக்கு மேல் மக்கள் வாழ்கின்றனர். பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவை சிறிய மாநிலம். மக்கள்தொகையும் குறைவு. இங்குள்ளவர்கள் வசதியாக வாழ்கின்றனர் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், புதுவையில் பாமர மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பசியோடு வாடாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். திட்டங்களை ஆய்வுசெய்து முடிவு எடுப்பேன். நான் எடுக்கும் முடிவு மக்களுக்கான முடிவாக இருக்கும்.

ஆளுநர் மாளிகையைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றப்படுமா?

மக்களுக்கும், எனக்கும் சாதாரண இடைவெளி கூட இருக்கக் கூடாது என நினைப்பவள். கரோனா உச்சத்தில் இருந்தபோதுகூட பாதுகாப்பு உடை அணிந்து மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களை ஊக்கப்படுத்தியுள்ளேன். மக்களுக்கும் எனக்கும் இடையில் எந்த இடைவெளியும் இருக்காது, தடுப்பும் இருக்காது. மக்களோடு உள்ள நெருக்கம் தொடரும்.

புதுவையில் தமிழ் அதிகாரிகள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளார்களே?

தமிழ் புறக்கணிக்கப்படவில்லை, ஆராதிக்கப்படுகிறது. தமிழ் மகுடம் சூடும். தமிழில்தான் பதவியேற்றுள்ளேன். தமிழுக்கு அதிகாரம் கிடைக்கும். தமிழிசை ஆளுநராக இருக்கும்போது தமிழ் கோலோச்சும். தற்போதுதான் வந்துள்ளேன். அதிகாரிகள் தொடர்பாக ஆய்வுசெய்து முடிவெடுப்பேன்.

ஆளுநர் - முதல்வர் மோதலால் அதிகாரிகள் யார் பேச்சைக் கேட்பது எனத் தெரியாமல் குழம்பியுள்ளனர். இனி அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்படுவார்களா?

அவரவர்களுக்கு ஒரு பாணி இருக்கும். எனது பாணி தனியானது. மற்றவர்களின் பாணியை விமர்சனம் செய்யமாட்டேன். இனிமேல் இணக்கமான சூழ்நிலை இருக்கும். அனைவரின் அதிகாரமும் எனக்குத் தெரியும். அவரவர் அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் உரிமைகள் பாதுகாக்கப்படும். யாரும் ஒடுக்கப்பட மாட்டார்கள், தடுக்கப்பட மாட்டார்கள்.

ஆளுநர் - முதல்வர் மோதல் நீடிக்குமா?

என் பாணி தனியானது எனக் கூறிவிட்டேன். சட்டவிதிக்கு உட்பட்டுச் செயல்படுவேன். பிரச்சினை ரீதியாகத்தான் எதனையும் அணுகுவேன். எனக்கு எந்த 'ஈகோ'வும் கிடையாது. என் பாணி சுமுகமானதாக இருக்கும். மக்கள் பயன்படும் வகையில் செயல்படுவேன்.

துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. ஆனால், போலீஸாருக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி சம்பளம்கூட கிடைக்கவில்லையே?

நான் இப்போதுதான் வந்துள்ளேன். அதைப் பற்றிப் பார்க்கிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழ் தெரிந்த உங்களை நியமித்துள்ளார்களா?

தமிழ் பேசும் இடத்துக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை நியமித்ததில் எந்த உள் அர்த்தமும் இல்லை, அரசியலும் இல்லை. உள்ளார்த்தமாக வந்துள்ளேன், உள் அர்த்தத்தோடு வரவில்லை.

அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதே?

நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளைப் பற்றி நாம் முடிவெடுக்க முடியாது. வழக்கை எப்படிக் கொண்டுசெல்ல வேண்டும் என ஆலோசித்து முடிவெடுப்போம்.

நீங்களும் மக்களைத் தொடர்ந்து சந்திப்பீர்களா?

நான் ஆளுநராக இல்லாமல், கட்சித் தலைவராக இருந்தபோது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்களைச் சந்தித்தேன். தெலங்கானா ஆளுநர் மாளிகை 'பிரஜா' மாளிகையாக மாறியுள்ளது. மக்களைச் சந்திக்கும் பழக்கம் உள்ளவள் நான். அதனால் அவசர நிலையில் இருப்பவர்கள்கூட என்னை நேரடியாக அணுகலாம். எனது மக்கள் சந்திப்பு எப்போதும்போலத் தொடரும்.

கிரண்பேடி நிதியைத் தடுத்துவிட்டார் என ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளார்களே?

முன்பு இருந்தவர்களின் நடவடிக்கையை விமர்சிக்கமாட்டேன். என் பாணி மாறுபட்ட பாணியாக இருக்கும். நான் தடுத்துப் பழக்கப்பட்டவள் அல்ல, அன்பைக் கொடுத்தே பழக்கப்பட்டவள். சாமானிய மக்களுக்கான என்னுடைய பணி தொடரும்.

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x