Published : 18 Feb 2021 11:45 AM
Last Updated : 18 Feb 2021 11:45 AM

ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது ஸ்மார்ட்டாக ஊழல் செய்யும் திட்டமாக மாறிவிட்டது: ஸ்டாலின் விமர்சனம்

மதுரை

அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும் ஆர்.பி. உதயகுமாரும் ஒட்டுமொத்தமாக மதுரையைப் பாழாக்கியவர்கள். ஆற்றுத் தண்ணீரை தெர்மாகோல் கொண்டு மூடியது முதல் நமக்கெல்லாம் கரோனா வராது என்று பொய் சொன்னது வரை முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் செல்லூர் ராஜூ என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மதுரை யானைமலை, ஒத்தக்கடைப் பகுதியில் நேற்று நடைபெற்ற, மதுரை மாவட்ட திமுக சார்பிலான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:

“ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரால் மிகப்பெரிய கொள்ளை நடந்து வருவது குறித்து நமது சட்டப்பேரவை உறுப்பினர்களும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகையாளர்களும் தொடர்ந்து புகார் தந்து வருகிறார்கள்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக வந்த பணத்தை மொத்தமாக கபளீகரம் செய்துள்ளார்கள் மதுரை வட்டாரத்து அதிகாரிகளும் அமைச்சரும், ஆளும்கட்சியினரும் என்ற புகாருக்கு இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை.

சுமார் 1000 கோடி ரூபாய் வரைக்கும் மத்திய, மாநில நிதியாக இந்த மதுரை மாநகராட்சிக்குள் வந்துள்ளது. இந்தப் பணத்தை வைத்து முறையான திட்டங்களைச் செய்யாமல் எதைச் செய்தால் கமிஷன் வாங்க முடியுமோ அதைச் செய்துள்ளார்கள்.

மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் பாலம் கட்டுவது இல்லை. அப்படிக் கட்டினால் நில ஆர்ஜிதம் செய்ய நாள் ஆகும். அதனால் உடனடியாக கமிஷன் வாங்க முடியாது. எனவே, தேவையில்லாத, அவசியமில்லாத இடத்தில் பாலம் கட்டத் திட்டமிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டியதாகக் கணக்கெழுதி விட்டதாகவும் சொல்கிறார்கள்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் கூட்டம் நடந்தபோது மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அதிகாரியோ அமைச்சர் செல்லூர் ராஜூவோ சரியான பதில் சொல்லவில்லை.

எங்கே பணி நடக்கிறது, திட்டப்பணிகள் எவ்வளவு என்ற தகவல்கள் கூட அதிகாரிகளிடம் இல்லை. முதலில் ஒரு தொகை சொல்வது, அடுத்து தொகையை மாற்றுவது என்று முறைகேடு நடக்கிறது. பல்பு மாற்றியதில் 21 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடக்கின்றன. எந்த ஊரிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட அந்தக் குழுவில் துணைத் தலைவராக அந்தத் தொகுதி எம்.பி.யும், உறுப்பினர்களாக சட்டப்பேரவை உறுப்பினர்களும் இருப்பார்கள் என்றும் விதியுள்ளது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த ஆலோசனைக் குழு கூட வேண்டும் என்பதும் விதி. இந்தக் கூட்டங்களை நடத்துவது இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது ஸ்மார்ட்டாக ஊழல் செய்யும் திட்டமாக மாறிவிட்டது. இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூவும், உதயகுமாரும் உடந்தையாக இருக்கிறார்கள்.

அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி. உதயகுமாரும் ஒட்டுமொத்தமாக மதுரையைப் பாழாக்கியவர்கள். ஆற்றுத் தண்ணீரை தெர்மாகோல் கொண்டு மூடியது முதல் நமக்கெல்லாம் கரோனா வராது என்று பொய் சொன்னது வரை முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் செல்லூர் ராஜூ.

மதுரையை ரோம், சிட்னி நகரங்களைப் போல ஆக்கப்போவதாகச் சொன்னார் செல்லூர் ராஜூ. சிங்கப்பூர் ஆக்கப் போகிறேன் என்றார் உதயகுமார். தேர்தல் முடிந்தபிறகு அவர்கள் அங்கு போய் தலைமறைவு ஆகலாமே தவிர, மதுரையை மாற்ற முடியாது.

மதுரையை மாற்றுவதற்கான கூட்டம்தான் இந்தக் கூட்டம். மதுரையை வளர்த்தெடுப்பதற்கான கூட்டம்தான் இந்தக் கூட்டம். மதுரையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தையும் வளர்த்தெடுப்போம்.

திமுக ஆட்சியானது மக்களாட்சியாக அமையும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிம்மதி தரும் ஆட்சியாக அமையும். சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். சட்டவிரோதச் செயல்பாடுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். அதில் நம்பிக்கையோடு இருங்கள். அதில் இந்த ஸ்டாலின் எப்போதும் பின்வாங்க மாட்டான். அமைதியான வாழ்வுக்கான உத்தரவாதத்தை இந்த மதுரை மண்ணில் இருந்து தமிழக மக்களுக்கு வழங்குகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x