Published : 18 Feb 2021 09:47 AM
Last Updated : 18 Feb 2021 09:47 AM

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக சசிகலா வழக்கு: மார்ச் 15-ல் விசாரணை

சென்னை

2017-ம் ஆண்டில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மார்ச் 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் 75 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனளிக்காமல் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதன் பின்னர் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவில் ஒருமனதாக அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை சசிகலா நியமித்தார்.

அதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா நான்காண்டு தண்டனை விதிக்கப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த சமயத்தில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அந்தப் பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகள் சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனால் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர். அதில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உள்ள நிலையில், கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.

பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக தங்களைக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கில் வழக்குக் கட்டணமாக 25 லட்ச ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கட்சியின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அதிமுக தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, வங்கிகளின் மேலாளர்கள் வங்கிக் கணக்குகளை சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பினருக்கு வழங்கினர். இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் நீதிமன்றக் கட்டணமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தும் வழக்குகளை மட்டுமே உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து சசிகலா, தினகரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை நகர சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு மாற்றப்பட்ட பிறகும் வழக்கு பட்டியலிடப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தண்டனை முடிந்து சென்னை திரும்பிய பின்னர் சசிகலா ஆலோசனையின்படி, அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சிவில் சென்னை நான்காவது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்படாமல் இருந்தால் அரசியல் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்றும், வழக்கை உடனே விசாரிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து இந்த வழக்கு மார்ச் 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

மார்ச் 15 அன்று விசாரணைக்கு வரும் வழக்கு காரணமாகத் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x