

சங்கரன்கோவிலில் தனியார் பைக் விற்பனை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பல லட்சம் மதிப்பிலான பைக்குகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகின.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திருவேங்கடம் சாலையில் வென்றிலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகவேல் என்பவருக்குச் சொந்தமான தனியார் பைக் விற்பனை நிலையம் அமைந்துள்ளது.
இங்கு புதிய பைக்குகள் விற்பனை மற்றும் இங்கு வாங்கிய பைக்குகள் பராமரிப்புப் பணிகளையும் செய்து வந்துள்ளனர். வழக்கம்போல் நேற்று இரவு பைக் விற்பனை மையத்தை ஊழியர்கள் அடைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
இன்று காலை 6.30 மணி அளவில் அப்பகுதியில் வந்த பொதுமக்கள் பைக் விற்பனை மையத்தில் உள்ளே இருந்து புகை வருவதைக் கண்டு இது குறித்து சங்கரன்கோவில் நகர தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
காலை 6.40 மணிக்கு சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கார்ல்மாக்ஸ், சரவணன், வெள்ளத்துரை, ராஜேந்திரன், முனியசாமி, இராமச்சந்திரன் உள்ளிட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடும் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கவிதா நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பைக்குகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.