

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 20 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.
சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலை அச்சங்குளத்தில் இயங்கி வருகிறது.
இதனை விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல், சாத்தூரைச் சேர்ந்த ராஜா, கீழச்செல்லையாபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார், பொன்னுப்பாண்டி, ஏழையிரம்பண்ணையைச் சேர்ந்த வேல்ராஜ் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்து வந்துள்ளனர்.
இந்த பட்டாசு ஆலையில் கடந்த 12ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து பட்டாசு ஆலை குத்தகைதாரர் பொன்னுப்பாண்டியையும், சக்திவேலையும் கைதுசெய்தனர்.
இந்நிலையில், வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி (57) என்பவரையும், மற்றொரு குத்தகைதாரரான வேல்ராஜ் (55) என்பவரையும் ஏழையிரம்பண்ணை போலீஸார் இன்று கைதுசெய்தனர்.