

விருதுநகர் - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகள் அக்டோபர் 2021-க்குள் முடிவடையும் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள நான்கு வழிச்சாலை புதுப்பித்தல், திட்ட மொத்த செலவு, மொத்த பராமரிப்பு செலவு, மொத்த வருமானம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரை முதல் கன்னியாகுமரி வரை கப்பலூர், எட்டுர்வட்டம் (சாத்தூர்), சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் இருப்பதாகவும் இந்த நான்கு சுங்கச் சாவடிகளின் மூலமாக இதுவரை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2020 மார்ச் வரை 1041.96 கோடி ரூபாய் சுங்கவரி வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.
மேலும் நான்குவழிச் சாலை அமைப்பதற்கான முதலீட்டு தொகை 31.01.2020 வரை 2113.95 கோடிகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் மார்ச் 2020 வரை 127.87 கோடிகள் என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
புதிய சாலை அமைக்க இலக்கு :
அதேபோன்று நான்கு வழிச்சாலை அமைக்க பட்டதில் இருந்து தற்போது வரை மதுரை முதல் விருதுநகர் வரை மட்டுமே மீண்டும் புதிதாக சாலை ஜூலை 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் முதல் கன்னியாகுமரி வரை 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய சாலை அமைக்கப்படவில்லை என்று கடந்த நவம்பர் 2020 இல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 19.10.2021 க்குள் சாலை புதுப்பிக்கும் பணிகள் முடிக்கப்படும் என தற்போது கிடைத்த தகவலில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை புதுப்பிக்கும் பணிகள் எப்போது தொடங்கும் எனத் தெரிவிக்கப்படவில்லை.
சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள சுங்கச் சாவடிகள் தற்போது மூடப்பட வாய்ப்பில்லை என எற்கனவே நவம்பர் மாதத்தில் நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.
சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு முதலீட்டு தொகை மற்றும் பராமரிப்பு செலவுகள் நிறைவு பேரும் வரை சுங்க வரி வசூல் செய்யப்படும்.
தற்போது மார்ச் 2020 வரை 1041.96 கோடி மட்டுமே சுங்கவரி வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் முதலீட்டு தொகை மற்றும் பராமரிப்பு செலவு மார்ச் 2020 வரை 2241.82 கோடிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் சமீபமாக அதிக அளவு பிரச்சனை எழுந்து வரும் சூழலில் அதை மூட வேண்டும் என்று மக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து இருக்கும் நிலையில் மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கடந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாள 50 சதவீத தொகை மட்டுமே வருமானம் கிடைத்துள்ளதால் மீதமுள்ள 50 சதவீத தொகையை பெறுவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் சுங்கச் சாவடிகள் செயல்படும் எனத் தெரியவில்லை.
இந்த மதுரை கன்னியாகுமரி நான்கு வழிச் சாலை தென் மாவட்டங்களை சென்னை, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுடன் இணைக்கும் மிகமுக்கிய சாலை ஆகும்.