Published : 18 Feb 2021 07:27 AM
Last Updated : 18 Feb 2021 07:27 AM

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பிப்.,25 முதல் விருப்பமனு அளிக்கலாம்: தேமுதிக அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் பிப்.,25 முதல் விருப்பமனு அளிக்கலாம் என தேமுதிக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் சட்டப்பேரவைத் தேர்தல் விருப்பமனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் 25.02.2021 வியாழக்கிழமை முதல் 05.03.2021 வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை விருப்பமனுக்களை பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தமிழ்நாடு சட்டப்பேரவை தனி தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டப்பேரவை தனி தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய் 5 ஆயிரம் செலுத்தி விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், தேர்தல் பனி குழு செயலாளர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்டம், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளைக் கழக நிர்வாகிளும், சார்பு அணி நிர்வாகிகளும் மற்றும் கழகத் தொண்டர்களும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாம் மாபெரும் வெற்றியடைய பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக, மநீம கட்சிகள் விருப்ப மனுக்களை வரவேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x