

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் பிப்.22-ல்ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டிசம்பரில் இருந்துஇதுவரை ரூ.175 உயர்த்தப்பட்டுள் ளது. பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
2011 திமுக ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.63.37. டீசல் ரூ.43.95. ஆனால், இப்போது அதிமுக ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 91.19. டீசல்ரூ. 84.44. மத்திய பாஜக அரசின் கலால் வரியும், அதிமுக அரசின் வாட் வரியும்தான் இந்த விலை உயர்வுக்கு காரணம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட அனைத்துஅத்தியாசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் ஆபத்தில் சிக்குகின்றன. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 50 சதவீதம் குறைந்த நிலையிலும், அதன் பயனில் ஒரு பைசாவைக்கூட மக்களுக்கு மத்திய பாஜக அரசு அளிக்கவில்லை. இவ்வளவு லட்சம் கோடி ரூபாய் கலால் வரி வசூல் எங்கு போனது என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. மத்திய அரசு கலால் வரியை குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை பெருமளவுக்கு குறையும். ஆனால், ஏழை எளிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஒரு பொருட்டாகவே அவர்கள் எண்ணவில்லை.
எனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவிலை உயர்வை கண்டும் காணாமல் இருக்கும் அதிமுக, பாஜக அரசுகளைக் கண்டித்தும், கலால்வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும் திமுக சார்பில் பிப். 22-ம் தேதி காலை 9 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் பெண்கள், வணிகர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் உள்ளோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.