சசிகலா எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லாதவர்: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கருத்து

சசிகலா எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லாதவர்: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கருத்து
Updated on
1 min read

சசிகலா எங்களுக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர், அவரை பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்வது ஆரோக்கியமாக இருக்காது என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் ஆவல்நத்தம் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பி திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சசிகலா எங்களுக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர். அவரைப் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்வது ஆரோக்கியமாக இருக்காது. அவர் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். அவர் குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. அதற்கு அவர் தீர்வு ஏற்படுத்தட்டும். எந்த வகையிலும் தொடர்பு இல்லாத ஒரு நபரை பற்றி மீண்டும் மீண்டும் பேசுவது நாகரிகமாக இருக்காது.

ஜெயலலிதாவால் துரோகி என அடையாளம் காட்டப்பட்டவர் டிடிவி தினகரன். அவர் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு தகிடுதத்தம் செய்து வருகிறார். அவர்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

கூட்டணியில் யார் வருகிறார்கள் என்பது முக்கியமல்ல. அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறோம். அதிமுக கொள்கை வேறு. பாஜக கொள்கை வேறு. எங்களுடன் கூட்டணிக்காக அவர்கள் வருகிறார்கள்.

மத்தியில் உள்ள பாஜகவுடன் இணைக்கமாக உள்ளதால் தான், தமிழகத்தில் 11 மருத் துவக் கல்லூரிகளைப் பெற முடிந்தது. நாங்கள் செய்த பல்வேறு செயல்திட்டங்கள் அடிப்படையில் மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in